Wednesday, October 17, 2018

அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி!

SHARE

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர்.

பாதுகாப்பு சபைக் கூட்டம் நிறைவடைந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனாதிபதியைச் சந்திருந்தனர்.

இந்தச் சந்திப்பு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காகவே நடந்தது. எனினும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்க்கமான எந்தவொரு உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரையும் அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அடுத்த வாரம் முக்கிய பேச்சு நடத்த இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்றது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அமைச்சுடன் தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மயந்த திசாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, எஸ்.எம்.மரிக்கார் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது வடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்தார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக இன்று நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிடிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE