Wednesday, October 31, 2018

சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக கருதுகின்றது- பிரிட்டன்!

SHARE

சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமராக கருதுகின்றது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் போது அவரது நடவடிக்கைகள் இலங்கையின் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு முரணானது என்பதையும் சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே சட்டபூர்வமான பிரதமராக கருதுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுவரா என ஹியுகோ சுவையர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தை மாற்றுவதை வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்திலேயே  முன்னெடுக்கவேண்டும், அதற்காக பாராளுமன்றத்தை  கூட்டவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்போது இந்த கருத்துக்களை வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவுடன் பேசும்போது நான் நிச்சயமாக இந்த விடயங்களை சுட்டிக்காட்டுவேன் என தெரிவித்துள்ள ஜெரமி ஹன்ட், பெருமளவானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE