Wednesday, October 17, 2018

இந்திய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி!

SHARE

தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்குப் பின்னால் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னால் தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று மாலை தொலைபேசியில் உரையாடினார் என்று தெரிவிக்கப்பட்டது.

தன்னைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்குப் பின்னால் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார் என்று இலங்கை, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஜனாதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு, இந்திய – இலங்கை உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ சுட்டிக்காட்டியிருந்தது.




இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று மாலை தொலைபேசியில் உரையாடினார் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

இதன்போது, தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, மோடிக்கு எடுத்துக் கூறினார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை என்றும், இந்தியப் புலனாய்வு சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.




ஊடகங்களில் வெளியான இந்தச் செய்திகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக,
“ஜனாதிபதி இந்தியப் புலனாய்வுச் சேவை என்று மாத்திரமே குறிப்பிட்டாரே தவிர, ‘றோ’ என்று கூறவில்லை. தலைவர்களைக் கெலை செய்யும் இரகசிய புலனாய்வு அமைப்புகளின் முயற்சிகள் தொடர்பாக, ஜனாதிபதி பொதுப்படையாகவே பேசினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நகர்வுகளை அறிந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி உறுதியாக கூறியிருந்தார். அத்துடன், எந்த இடத்திலும் ‘றோ’ என்றும் அவர் குறிப்பிடவேயில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
SHARE