Monday, October 22, 2018

போதநாயகியின் வழக்கு ஒத்திவைப்பு – கணவர் வன்னியூர் செந்தூரன் நீதிமன்றில் முன்னிலையானார்!

SHARE

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்படாமையால் வழக்கு விசாரணையை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைத்தது திருகோணமலை நீதிவான் நீதிமன்றம்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று(22) திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
விரிவுரையாளரின் கணவர் வன்னியூர் செந்தூரன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் விரிவுரையாளரரின் தாய் மற்றும் சகோதரர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில் சென்றிருந்தார். அதனால் விரிவுரையாளரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் வழக்கு விசாரணையை தவணையிடுமாறு பொலிஸாரால் கோரப்பட்டது. அதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
SHARE