Monday, October 8, 2018

மக்கள் வங்கியின் யாழ். பல்கலை. வளாகக் கிளையில் அடகு நகை மோசடி!

SHARE

மக்கள் வங்கியின் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக – திருநெல்வேலிக் கிளையில் அடகு வைக்கப்பட்டு பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று கட்டளையிட்டது.

“வழக்கில் சந்தேகநபர்களான 6 வங்கி உத்தியோகத்தர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களான தங்க நகைகள் பொதிகள் அவசியமில்லை என்று மன்று முடிவுக்கு வருகின்றது.

அதனால் முறைப்பாட்டாளரான மக்கள் வங்கியால் முன்வைக்கப்பட்டுள்ள 143 தங்க நகைப் பொதிகளை விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையிட்டார்.
மக்கள் வங்கியின் திருநெல்வேலிக் கிளையின் அடகுப் பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்களால் வாடிக்கையாளர்களின் நகைகள் மோசடி செய்யப்பட்டன. 2012ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.




வங்கிக் கிளையின் உத்தியோகத்தரான பி.கஜனாத், கோப்பாய் பொலிஸில் சரணைந்திருந்தார். அவரால் நகைகள் சில கையளிக்கப்பட்டன. அவர் உள்பட 6 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் மக்கள் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்ட நகைகளில் ரூபா 10 கோடியே 67 லட்சத்துக்கும் மேற்பட்ட தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டதாக அறிய வந்தது.

அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 193 பொதிகள் மீட்டக்கப்பட்டன. அவை வழக்கின் சான்றுப் பொருளாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வழக்கில் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நகைகளை விடுவிக்கவேண்டும் என்று முறைப்பாட்டாளரான மக்கள் வங்கி சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.




6 வருடங்களாக அந்த நகைகளை வாடிக்கையாளர்களுக்கு மீள வழங்கத் தவறியதால் மக்கள் வங்கிக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி வங்கியின் சட்டத்தரணி சிந்துஜா சுகாஷ் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த விண்ணப்பம் தொடர்பான கட்டளையை நீதிமன்று இன்று வழங்கியது.

இதேவேளை, மக்கள் வங்கியின் யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவரால், நிதி நிறுவனங்கள் மீதான அதியுச்ச அதிகாரம் கொண்ட நிதியியல் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில் 2014ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டது.




தமது நகைகளை மீட்டுத்தருமாறும், இழப்பீடு பெற்றுத் தருமாறும் கோரி அந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளின் முடிவில் முறைப்பாட்டாளரின் நகையை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒம்புடஸ்மன் பரிந்துரைத்த போதிலும், நகையை மீளளிப்பதற்கு வங்கி நடவடிக்கை எடுக்காத நிலையில், மேன்முறையீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE