Tuesday, October 30, 2018

போலி அரசு தொடர்ந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடைவிதிக்கும் – ஐ.தே.க எச்சரிக்கை!

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் கற்பிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கடினமான வேலையல்ல. போலி அரசு தொடர்ந்தால், சர்வதேச சமூகத்தின் பொருளாதார தடை மற்றும் ஏனைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா எச்சரித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, ஜனாதிபதிக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று பெரும் மக்கள் பேரணியை நடத்தியது.

கொழும்பு லிபேர்ட்டி சுற்றுவட்டத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
இதன்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய, ஹரின் பெர்னான்டோ, “மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கு ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரிகின்றோம். அவரை வீட்டுக்கு அனுப்பப் போகின்றோம்” என்று கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி சிறிசேன, அபகரிப்பதற்குத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரச கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தடைவிதித்தும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றத் தடை உத்தரவை பொலிஸ் பெற்றிருந்தது.

அத்துடன், இரண்டாயிரம் பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையின் 10 அணிகளும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், நீர்ப்பீரங்கி வாகனங்களும், ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் தொகையான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணியினால், அமெரிக்க தூதரகம், மற்றும் அமெரிக்க மையம் என்பன மூடப்பட்டுள்ளன.
SHARE