Tuesday, October 30, 2018

வலுப்பெறுகின்றது மஹிந்த – மைத்திரி கூட்டணி: தற்போதைய நிலைவரம்!

SHARE

இலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்ததில் இருந்து நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஒருபுறம் மஹிந்த ராஜபக்க்ஷவின்  நியமனம் சட்டவிரோதமானது என்றும், அது அரசியலைப்பிற்கு முரணானது என்றும் கூறிவருகின்றது. குறித்த நியமனம் சட்டப்பூர்மானது என்றும், ஜனாதிபதியால் புதிதாக பிரதமரை நியமிக்க முடியும் என்றும் புதிய பிரதமர் தரப்பு கூறிவருகின்றது.

இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவலில் ஈடுபட்டு வருகின்றனர். சற்று முன்னர் கூட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் துனேஷ் கங்கந்த, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய இந்த நியமனத்துடன் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் 5 உறுப்பினர்கள் இப்போதைக்கு புதிய அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ளனர்.

இதனால் பெரும்பான்மையாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 101 ஆக குறைவடைந்துள்ளது. இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ – ஜனாதிபதி கூட்டணிக்கு 101 உறுப்பினர்களாக எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப்போகின்றது என்பது தொடர்பில் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இருப்பினும் இதன்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணின்  7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கட்சிக்கு ஆதரவு வழங்கும் என்பதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
SHARE