Thursday, November 29, 2018

தமிழ் ராக்கர்ஸ் 2.0: யாராலும் அழிக்க முடியாதோ!

SHARE

முன் குறிப்பு: இந்த செய்தியின் நோக்கம் தமிழ் ராக்கர்ஸை புரமோட் செய்வதோ, தமிழ் சினிமாவின் அமைப்புகளைப் புண்படுத்துவதோ இல்லை. உண்மையைத் தேடுவது மட்டுமே இதன் நோக்கம்.

தமிழ் சினிமாவின் சாபக்கேடு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிறார்கள். ஆனால், உண்மையில் மிகப்பெரிய வாய்ப்பினைத் தமிழ் சினிமாவுக்கு அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் ரிலீஸான அன்றே இணையத்தில் பதிவேற்றுவதும், இதைச் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கும்போதும் அதனை மீறுவதும் ‘டிஜிட்டல் தீவிரவாதம்’ என மேற்குலக நாடுகளில் விவரிக்கும் அளவுக்குத் தீவிரமான குற்றம். ஆனால், எவ்வித பயமும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ததும் இல்லாமல் ‘படத்தின் ஒரிஜினல் அனுபவத்தை உணர தியேட்டரில் பாருங்கள்’ என்று குசும்பாகப் பின்குறிப்பு கொடுக்கும் அளவுக்குத் தமிழ் ராக்கர்ஸ் வளர்ந்துவிட்டதால்தான் ‘தமிழ் ராக்கர்ஸ் 2.0’ எனக் குறிப்பிட வேண்டியதிருக்கிறது.

2.0 படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ததும் நூற்றுக்கணக்கில் சமூக வலைதளங்களில் அந்தத் தகவல் பகிரப்படுகிறது. எப்படி இத்தனை சீக்கிரம் ரிலீஸ் செய்ய முடிந்தது? என்று ஒரு குழுவும், ‘எப்படி ஒரிஜினல் ஆடியோ கிடைத்தது’ என்று ஒரு குழுவும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், பேச வேண்டியவர்கள் யாரும் பேசவே இல்லை.

தமிழ் ராக்கர்ஸில் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனமான லைகா. வழக்கை விசாரித்த நீதிபதி “தமிழ் ராக்கர்ஸுக்குச் சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடை” என்று தீர்ப்பளித்தார். தனது தரப்பில் பெறப்பட்ட தீர்ப்பினை இணையதள நிறுவனங்கள் சரிவர அமல்படுத்தவில்லை என இணையதளத்தில் 2.0 ரிலீஸான உடன் மற்றொரு வழக்கைப் பதிவு செய்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்து தமிழ் ராக்கர்ஸைத் தடைசெய்ய வழி பிறந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், லைகா அமைதி காத்துக்கொண்டிருக்கிறது.

லைகா போல வாளாவிருந்ததா தமிழ் ராக்கர்ஸ்?

தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸானதும் அனைவரும் டவுன்லோடு செய்யச் சென்றனர். அவர்களில் பலருக்கு படம் ரிலீஸாகவே இல்லை. எனவே, தமிழ் ராக்கர்ஸிலிருந்து 2.0 நீக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

அளவுக்கு அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் டவுன்லோடு செய்யத் தொடங்கியதால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் சர்வர் முடங்கியது. படத்தை யாராலும் டவுன்லோடு செய்யமுடியவில்லை. ஆனால், அப்போதும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ சமூகம் சும்மா இருக்கவில்லை. 2.0 படத்தின் டோரண்ட் டாகுமெண்டை உடனடியாக சமூக வலைதளங்களிலும், கூகிள் டிரைவிலும் பகிர்ந்து தங்களது பரப்புரையை மேற்கொண்டனர். அவர்களில் ஒரு குழுவினர் ஒருபடி மேலே சென்று ‘Weshare' அப்ளிகேஷன் மூலம் முழுப் படத்தையே பகிரத் தொடங்கினர்.

திரைப்படத்தில் எவ்வளவோ அறிவியலையும் அறிவையும் பயன்படுத்தும் இயக்குநர்களுக்குக்கூடத் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துக்கட்டுவது எப்படி என்று தெரியவில்லையே. அனைத்துத் தளங்களுக்குமான படத்தை இயக்கத் தயாராக இல்லையே. ஆனால், தமிழ் ராக்கர்ஸுக்கு அந்தக் கவலை இருக்கிறது. தனது இணையதளத்துக்கு வரும் ஒருவர், அவரது பயன்பாட்டுக்கான டேட்டா அளவில் படம் இல்லாமல் வெளியே செல்லக் கூடாது எனும் வகையில் ‘1080p' தரத்தில் 2.5 GB HD பிரிண்ட் இருந்தாலும், HDRip தரத்தில் 400 MB அளவிலான படத்தையும் வைத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் தன்னிடம் வரும் எந்தத் தனி நபரையும் ஏமாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், கூட்டம் குறையட்டும், தியேட்டருக்குப் போகலாம் எனக் காத்திருந்த ‘வட சென்னை’ ரசிகர்களுக்கு ‘4K' தரத்தில் அந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

வெளிநாடுகளில் வாழும் தென்னிந்திய மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ‘டெண்ட்கொட்டா’ என்ற இணையதளத்திலிருந்து வட சென்னை திரைப்படத்தை டவுன்லோடு செய்திருப்பது, அந்தப் படத்தின் ஃபோட்டோவைப் பார்க்கும்போதே தெரிகிறது. டெண்ட்கொட்டா இணையதளத்தில் படத்தை அப்லோடு செய்யவும், அவற்றை வெளிநாடுகளில் இருப்பவர்கள் சந்தா கொடுத்து பார்க்கவும் சட்டப்படியே உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி சந்தாவில் சேர்ந்து படம் பார்த்தவர்களில் யாரோ ஒருவர்தான் 4K தரத்தில் டவுன்லோடு செய்து தமிழ் ராக்கர்ஸுக்குக் கொடுத்திருக்க வேண்டும். எனவே, டெண்ட்கொட்டா இணையதளத்தில் படம் பார்ப்பவர்கள் டவுன்லோடு செய்ய முடியாத அளவுக்கு அதன் பாதுகாப்பினை பலப்படுத்த முனையாமல் படத்தை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸின் மீது பாய்வதால் என்ன லாபம்? அப்படியும் தமிழ் ராக்கர்ஸின் மீது தான் பாய வேண்டும் என்றால், டெண்ட்கொட்டாவில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் தகவல்களை வாங்கி, அவர்களில் யாரோ ஒருவர் இணையம் மூலம் படத்தை தமிழ் ராக்கர்ஸுக்கு அனுப்பினார்களா என்று கண்டுபிடிக்கவும் முயற்சி செய்யலாம். ஆனால், முடியாது. காரணம், திரையுலகினர் நினைப்பதைவிட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அவர்களின் தகவல்கள் பகிரப்படுகின்றன.

தமிழ் ராக்கர்ஸ் குழு தானாக வந்து சிறையில் உட்கார்ந்துகொள்ளும் வரையிலோ; நமக்கு வேலூரிலோ, வேப்பம்பட்டியிலோ மொபைல் கடை நடத்தும் யாரோ ஒருவர் கிடைக்கும் வரையிலோ, ‘சென்னைக்கு மிக மிக அருகில்’ என்பது போல, தமிழ் ராக்கர்ஸுக்கு மிக மிக அருகில் எனச் சொல்லித் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டும்தான் சாத்தியம் என்பதே யதார்த்தம்.

பல காலமாக எவ்வித வருவாயும் இல்லாமல் பொழுதுபோக்குக்காக அந்த இணையதளத்தை நடத்திவந்த தமிழ் ராக்கர்ஸ் குழுவினருக்குத் தற்போது வருமானமும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் எப்படிச் சட்டத்துக்குப் புறம்பாகப் படங்களை அப்லோடு செய்கிறார்களோ, அதேபோல சட்டத்துக்குப் புறம்பான வகையில் விளம்பரங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தற்போது அந்த இணையதளத்தில் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. அது கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் விளம்பரங்கள் என்றாலும் பணம் கிடைக்கத்தான் போகிறது. இதனால்தான் தமிழ் ராக்கர்ஸ், நீதிமன்ற உத்தரவினையும் மீறிப் படங்களை ரிலீஸ் செய்து வருகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் வெர்ஷன் 2.0வை எட்டிவிட்டது. அதைத் தடுக்க முனையும் தமிழ் சினிமாவும், இதர அமைப்புகளும் எப்போது தங்களை மேம்படுத்திக்கொண்டு தமிழ் ராக்கர்ஸின் பயணத்தைத் தடுத்து நிறுத்தப்போகின்றன?
SHARE