Friday, November 2, 2018

பிரதமர் நியமனம் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி தெரிவித்தது என்ன?

SHARE

இலங்கையின் புதிய பிரதமர் நியமனமானது தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கேற்பவும் அரசியலமைப்பிற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரஸ் உடன்   நேற்று மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை எடுத்துக் கூறியுள்ளார்.

அந்த தொலைபேசி உரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்க நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளுடன் எந்தவிதமான வன்முறை நிகழ்வுகளும் இடம்பெறவில்லை. அரசியல் நன்மைகளுக்காக சிலர் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் மிக விரைவில் பாராளுமன்றத்தை கூட்டியதும் தற்போது இருந்துவரும் சந்தேகங்கள் நீங்கி ஸ்திரமான நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் வன்முறைகளின்றி செயற்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐ.நா. செயலாளர் நாயகம்,

இலங்கை தொடர்ச்சியாக ஜனநாயகம் மற்றும் நல்லிணக்க நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்து வருவது குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இலங்கை ஜனாதிபதி கேட்டுக்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பை வழங்க தான் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராக உள்ளது என்றார்.
SHARE