Saturday, November 24, 2018

நான் அரசமைப்பை மீறவில்லை - பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சிறிசேன

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாக  பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா ஸ்கொட்லாண்டிடம் தெரிவித்துள்ளார்.

நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான தொலைபேசி உரையாடலின் போதே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறு நான் தெளிவாககேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ள சிறிசேன இலத்திரனியல் முறையை பயன்படுத்தி வாக்கெடுப்பை நடத்துமாறும் அல்லது பெயர்மூல வாக்கெடுப்பை நடத்துமாறும் கேட்டுக்கொண்டதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கை ஜனநாயகத்தை பின்பற்றுவதை பொதுநலவாயம் முக்கியமான விடயமாக கருதுகின்றது என தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு ஏற்ப அல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அல்லது பெயர்களின் மூலம் உரிய நடைமுறைகளை பேணுமாறும் தான் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலும் ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடு என்ற வகையிலும் இலங்கை ஜனநாயகத்தை கடைப்பிடித்து வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக செயலாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கையுடன் நெருங்கிப் பணியாற்றும் என்று உறுதியளித்துள்ள அவர், தற்போதைய அரசியல் நெருக்கடியை இலங்கை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
SHARE