Friday, November 2, 2018

சர்வதேச சமூகம் ஜனநாயகத்தின் பின்னால் உள்ளது : ரணில்

SHARE

சர்வதேச சமூகம் ஜனநாயகத்தின் பின்னால் உள்ளது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் NDTV தொலைக்காட்சிக்கு நேற்று(வியாழக்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில், “இது எமக்குக் கிடைக்க பாரிய வெற்றி. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி இந்தப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வேண்டும்.

அதனை மாத்திரமே என்னால் கூற முடியும். நாடாளுமன்ற பெரும்பான்மையை பரிசீலிக்க வேண்டும். அதனைத் தடுக்க முடியாது. 113 பேரின் நிலைப்பாடே தேவைப்படுகிறது. தற்போது எனக்கு 113-ஐ விட அதிகப் பெரும்பான்மை இருக்கிறது.

நாம் கலந்துரையாடலில் இருக்கும் போது அதிகளவிலான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன. 150 மில்லியன் ரூபா தருகின்றோம், எமது தரப்பிற்கு வாருங்கள் என தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன.

எமது நாடாளுமன்ற உறுப்பினர் அதன்போது 250 மில்லியன் கோரி, பின்னர் சிரித்துக்கொண்டு 400 மில்லியனைக் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி தரப்பின் பல்வேறு குழுக்களே அவ்வாறு கோரியுள்ளனர். எந்த அமைச்சு தேவை என கேட்கின்றனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இருப்பதாக நான் நினைக்கின்றேன்.

நாடாளுமன்ற பெரும்பான்மையை பரிசீலித்து அதில் நான் தோல்வியடையும் வரையும் அல்லது மீண்டும் தேல்தலுக்கு செல்லும் வரையும் நானே நாட்டின் பிரதமர். அவ்வாறு இடம்பெறவில்லையென்றால், கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பிரச்சினை இல்லை.

அரசியலமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். இந்தியா இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நான் நினைக்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகள், இவ்வாறான விடயங்கள் ஊடாக பதில் தேடியுள்ளன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பெரும்பான்மையின் அடிப்படையில் அதனைத் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பின்னால் சர்வதேச சமூகம் உள்ளது.

சீன தூதுவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. சீனாவின் தூதுவர் இங்கு வந்தார். தகவல்கள் தேவை என அவர் என்னிடம் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தகவல்களைக் கேட்டறிந்து கொண்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதனை அறிந்துகொள்ளும் தேவை சீனாவிற்கு உள்ளது. இங்கு சீனாவின் அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை“ என தெரிவித்துள்ளார்.
SHARE