Friday, November 16, 2018

நாடாளுமன்றத்தில் மோதல் – விஜித ஹேரத் உள்ளிட்ட நால்வர் காயம்!

SHARE


நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மோதலில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் காயமடைந்துள்ளார்.

இன்று நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததுடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் சபைக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு வலியுறுத்தி அரச தரப்பினர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தினர்.

இதன்போதே விஜித ஹேரத் காயமடைந்துள்ளார். அத்துடன், சபாநாயகர் மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீது மகிந்த ராஜபக்ச தரப்பினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையினைத்தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.




SHARE