Sunday, November 4, 2018

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிக்கப்பட்டது!

SHARE

நாடாளுமன்றம் வரும் 14ஆம் திகதியே கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி கடந்த 26ஆம் திகதி நியமித்தார். இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அதனை சீர் செய்வதற்கு உடனடியாக நாடாளுமன்றைக் கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்கவும் மறுநாள் 27ஆம் திகதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஒக்டோபர் 27ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 16ஆம் திகதிவரை ஜனாதிபதியின் உத்தரவில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதன் ஊடாக நாடாளுமன்றின் இரண்டாது கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு தலைநகர் கொழும்பில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகியனவும் நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தின.

மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி நாட்டின் அரசியல் குழப்பநிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தின. ஐ.நா. பொதுச் செயலாளரும் அதனையே வலியுறுத்தினார்.

எனினும் எல்லாவற்றையும் புறம்தள்ளிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னர் அறிவித்த திகதியிலிருந்து இரண்டு நாள்கள் முன்தாக நாடாளுமன்றை ஆரம்பிப்பதாக உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.



SHARE