Monday, November 12, 2018

ஜனாதிபதியின் அலட்சியம் பொதுமக்களுக்கு ஆபத்தாக மாறிவிட்டது – கரு ஜெயசூரிய

SHARE

ஜனாதிபதியின் அலட்சியம் காரணமாக இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக கூடிய ஆபத்து உருவாகியுள்ளது என கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பலகட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கையின் சட்ட பூர்வத் தன்மை குறித்து தீர்மானிப்பதை, ஜனாதிபதி தடுத்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தின் பாதுகாவலன் என்ற அடிப்படையில் நான் கடந்த இரண்டு வாரகாலமாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் உரிமைகளை பறித்ததையும் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை முடக்கியதையும் நான் பார்த்துள்ளேன்.

இலங்கையின் இறைமையின் இயந்திரமான நாடாளுமன்றம் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய வேண்டுமென்ற அலட்சியம் காரணமாக இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அரசமைப்பை பாதுகாப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைத்து அரச பணியாளர்களையும் அந்த சத்தியப்பிரமாணம் குறித்து சிந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசாங்கத்தின் சட்டபூர்வதன்மை குறித்த வாக்கெடுப்பை நடத்துமாறு நாடாளுமன்றத்தின் 124 உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். 116 உறுப்பினர்கள் என்னை சந்தித்து வேண்டுகோள் லிடுத்தனர், ஏனைய 8 உறுப்பினர்கள் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள் முன்னர் நடந்துகொண்டது போல நானும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை ஏற்று வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பேன் என தெரிவித்தேன் அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிறுத்துமாறு எந்த உறுப்பினரும் கேட்டுக்கொள்ளவில்லை நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

முன்னாள் படையதிகாரி என்ற அடிப்படையில் நான் எப்போதும் நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராகயிருக்கின்றேன்.

ஜனாதிபதியை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பாற்ற முடிந்தமை எனக்கு கிடைத்த சிறப்புரிமையாகும்.

இந்த நடவடிக்கைகளிற்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி நான் எதிர்கொள்ள தயார்” என தெரிவித்துள்ளார்.
SHARE