Thursday, November 1, 2018

சர்வதேச தலையீடா? – ஆதாரமில்லை என்கிறார் ரணில்!

SHARE

இலங்கையின் அரசியல் குழப்பநிலைகளின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உண்டென குறிப்பிடுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் கீழ் ரணில் செயற்பட்டதாகவும், அரசியல் சர்ச்சைகளுக்கு பின்னணியில் மேற்குலகம் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச ஊடகங்களுக்கு பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் சந்தித்த ரணில் அதனை மறுத்துள்ளார்.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பெயரை சில கட்சிகளும் சிவில் அமைப்புகளும் பரிந்துரைத்த போதும், மைத்திரியை பொதுவேட்பாளராக நிறுத்தியதாக ரணில் மேலும் குறிப்பிட்டார். கட்சிகளுக்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.தே.க.வின் ஆதரவில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரி வெற்றிபெற்று தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும், கடந்த வாரம் தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறிய பின்னர் தேசிய அரசாங்கம் இல்லாமல் போனது. அதுமட்டுமன்றி, ஒருமித்து பயணித்த இரு தலைவர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாக தற்போது படிப்படியாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE