விக்ரம் நடித்துவரும் 'கடாரம் கொண்டான்' படத்திலிருந்து படப்பிடிப்பு தொடர்பான முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர்ந்து வித்தியாசமான ரோல்களைத் தேர்வு செய்து நடித்துவரும் நடிகர் விக்ரம், சமீபத்தில் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' எனும் படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களையே அந்தப் படம் பெற்ற நிலையில், நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் ‘கடாரம் கொண்டான்’ எனும் படத்தில் தற்போது நடித்துவருகிறார் விக்ரம்.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இதை இணைந்து தயாரிக்கிறது. மலேசியாவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகிவரும் இதில், அக்ஷரா ஹாசன், அபி மெக்தி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த படங்களிலேயே ரஜினி நடித்த கபாலியில்தான் மலேசியா குறித்து விரிவாகக் கூறப்பட்டிருந்தது. தற்போது இப்படமும் அங்கேயே நடப்பதாகக் காட்டப்படுவதால் மலேசியா குறித்து அறிந்துகொள்ள விளைவோர் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் மிகவும் ஸ்டைலிஸாக விக்ரம் தோன்ற சமீபத்தில் வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக், நல்ல கவனத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படப் படப்பிடிப்பு குறித்த முக்கியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மலேசியாவில் நடந்துவந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிவில் வியத்தக்க அவுட்புட் இப்படத்திற்குக் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ள இப்பட இயக்குநர், படக்குழுவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.