Saturday, December 8, 2018

ஜனாதிபதியின் புதிய சுற்றறிக்கை பொதுமக்களை ஏமாற்றும் செயல்: பொன்சேகா

SHARE

அரச வைபங்களை ஹோட்டல்களில் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளமை பொதுமக்களை ஏமாற்றும் செயல் என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் சரத் பொன்சேகா நேற்று(வெள்ளிக்கிழமை) கலந்துக் கொண்டிருந்தார்.

இதன்போது, அரச வைபங்களை ஹோட்டல்களில் நடத்துவதற்கு தடை விதித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என வெளிப்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார். விஜேராம மாவத்தையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஹெலிகொப்டர் வழங்குகிறார். இவ்வாறாக மறைமுகமாக அரச நிதியை வீணடித்துக் கொண்டு, இவ்வாறான அறிவிப்புகளின் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்.

ஆனால், சில நிகழ்ச்சிகளை ஹோட்டல்களில் ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் காணப்படுகிறது. 300 – 400 பேர் கூடும் சில நிகழ்வுகளை ஹோட்டல்களில் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. ஆனால், ஜனாதிபதி யதார்த்தத்தை புரிந்துக் கொள்ள தெரியாதவராக காணப்படுகிறார்.

இவர் அனைத்தையும் பொலன்னறுவை மட்டத்தில் அளவிடுகிறார். ஆனால், நாம் இருப்பது கொழும்பில் என்ற யதார்த்தத்தை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். இதை புரிந்துக் கொள்ள முடியாவிடின் அது பாரிய பிரச்சினையாகும்” ‘ எனத் தெரிவித்தார்.
SHARE