Friday, December 21, 2018

கையடக்க தொலைபேசி பயன்படுத்தாத உலக வல்லரசு தலைவர் புட்டின்!

SHARE
சர்வதேச ரீதியாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பெருகிக்கொண்டே செல்கின்றது.

அடுத்த வருடம் உலகளவில் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 468 கோடியை தொட்டுவிடும் என்றும் அந்த தொகை 2020-ம் ஆண்டளவில் 478 கோடியையும் கடந்து விடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

எனினும், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதில்லை என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வௌியிட்டுள்ளார்.

அவ்வாறாயின் ஜனாதிபதி புட்டின் தகவல்களை எவ்வாறு பெறுகிறார் என்று ‘ரஷ்யா 24’ தொலைக்காட்சியின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், “ஒரே ஒரு தகவல் ஆதாரத்தையோ, ஊடக செய்தியையோ மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என்பது ஜனாதிபதி புட்டினுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்” என்று தெரிவித்தார்.

அத்துடன் “நாளிதழ் செய்தி சுருக்கங்கள், தொலைக்காட்சி செய்திகளின் சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர் தகவல்களை பெற்றுக்கொள்கிறார்.

கணிணியில் அவர் தனிப்பட்ட முறையில் இணையதளங்களை பார்த்துக்கொள்கிறார். எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் கையடக்க தொலைபேசி  கிடையாது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
SHARE