Tuesday, December 18, 2018

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!

SHARE

நாடாளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்தார், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச, தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளதால், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என்று அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைய, அதிக ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே, சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேவேளை, எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக, மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சவும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த அனுரகுமார திசநாயக்கவும் பதவியிழந்துள்ளனர்.

முன்னதாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை சபாநாயகருக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE