Friday, December 21, 2018

வடமராட்சி கிழக்கிலும் தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகள்!

SHARE

வடமராட்சி கிழக்கிலும், ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளது’ என குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், குறித்த சுவரொட்டிகள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சுவரொட்டியில், ‘தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டமானது, ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.

ஆயுத போராட்டமானது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.’  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்டிய பகுதிகளில் இதேபோன்ற வாசகங்களையுடைய சிவப்பு நிறத்தினாலான சுவரொட்டிகள் நேற்று மாலை ஒட்டப்பட்டிருந்ததோடு, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதையடுத்து குறித்த சுவரொட்டிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


SHARE