Wednesday, December 26, 2018

காதலின் வலியைக் கடத்தும் ‘கண்ணே கலைமானே’!

SHARE

உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் ‘எந்தன் காதலை’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே திரைப்படம் தேனி மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வேளாண்மை மாணவனாக வலம்வரும் உதயநிதி தனது சொந்த ஊரில் விவசாயம் செய்பவராக நடித்துள்ளார். தர்மதுரை படத்தில் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணியை அமைத்த சீனு ராமசாமி, அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பினால் மீண்டும் அதே கூட்டணியை ‘கண்ணே கலைமானே’ படத்திலும் தொடர்ந்துள்ளார்.

“எந்தன் கண்களை காணோம்

அவள் கண்களில் கண்களைத் தொலைத்தேனா?

எந்தன் கண்களை காணோம்

அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா?

நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்?

உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்

எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று”

என்று காதலை நினைத்து உதயநிதி கதாபாத்திரம் ஏங்குவதாக வரிகள் அமைந்துள்ளது. சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார். பெரும்பாலும் லிரிக்கல் வீடியோவில் பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோவில் தமிழில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் வெளியீட்டுப் பணிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே சீனு ராமசாமி தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார். இவரது இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இந்தப் படத்தையும் மதுரையை மையமாகக் கொண்டே உருவாக்கிவருகிறார்.


SHARE