Thursday, January 31, 2019

விவாதத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக யாழ்.பல்கலைக்கழகம் முதலிடம்!

SHARE

இரசாயன விஞ்ஞான கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற  பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரசாயனவியல் விவாதப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதலாமிடத்தைப் பெற்றிருக்கிறது.

கொழும்பு பல்கலைக்கழகமும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகமும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றிருக்கின்றன.

இந்த விவாதப்போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக முன்று வருடங்களாக முதலிடத்தைப் பெற்ற பெருமைக்குரியதாகிறது.

" யாழ்.பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் சங்கம் இரசாயனவியல் திணைக்களத்தின் பட்டதாரி மாணவர்கள் மத்தியில் இருந்து  சிறந்த குழுவைத் தெரிவுசெய்வதற்காக வருடாவருடம் விவாதப்போட்டிகளை ஒழுங்கு செய்துவருகிறது. அந்த மாணவர்கள் மூன்றுவார தீவிர பயிற்சிக்குப் பிறகு  விவாதப்பொருட்கள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படும்" என்று கடந்த இரு வருடங்களாக அந்த பல்கலைக்கழகத்தின் அணிக்கு தலைவராக இருந்த அநுராகவன் கூறினார.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இரசாயனவியல் விவாதப்போட்டி இரசாயன விஞ்ஞான கல்லூரியினால் இரசாயனவியல் தொடர்பில் மிகவும் அண்மைய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இரசாயனவியலை பிரபல்யப்படுத்துவதற்கும் ஏற்டாடு செய்யப்படுகிறது. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நிகழ்வாக இது விளங்கிவருகிறது. இது பட்டதாரி மாணவர்கள் ஒரு குழுவாக செயற்படுகின்றபோது அவர்களின் திறனாய்வுச் சிந்தனையையும் தர்க்கரீதியான விவாத ஆற்றலையும் தகவல் அறிவுத் திறனையும் விருத்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இரசாயனவியல் விவாதப்போட்டியில் பங்குபற்றுபவர்களை  5 தேசிய பல்கலைக்கழகங்களினதும் (கொழும்பு, பேராதனை, ஸ்ரீஜெயவர்தனபுர, ருஹுணு, மற்றும் யாழ்ப்பாணம் ) இரசாயனவியல் திணைக்களங்கள் இரசாயன விஞ்ஞான கல்லூரியுடன் சேர்ந்து நியமிக்கின்றன.

முழுமையான மதிப்பீட்டுக்குப் பிறகு வெற்றியாளர்களை விரிவுரையாளர்கள், மற்றும் இலங்கையில் உள்ள முன்னணி ரோஸட் மாஸ்டர்கள் அடங்கிய நடுவர் குழு தெரிவுசெய்யும்.கலாநிதி தினுஷா உடுகலவின் தலைமையின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

SHARE