Tuesday, January 29, 2019

யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்

SHARE

யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்று மாடிகளை கொண்ட வர்த்தக தொகுதி , வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதியினை  பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும் , தவறும் பட்சத்தில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் முதல்வர் தெரிவிக்கையில் ,

தற்போதைய மத்திய பேருந்து நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண நகரப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடி , சுகாதார சீர்கேடுகள் , சன நெருக்கடிகள், வியாபர நிலையங்களுக்கான நெருக்கடி, இடப்பற்றாக்குறைகள் , ஆகியவற்றை தீர்க்கும் முகமாக தற்போதுள்ள பேருந்து நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளதனால் , தற்போதைய மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக ஸ்ரான்லி வீதியில் , யாழ்.புகையிரத நிலையத்திற்கு பின்புறமாக மாற்றப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகளின் பின்னர் தற்போது அங்கே தற்காலிக வர்த்தக நிலையம் நடாத்தியவர்களிற்கு மாநகர சபைச் சட்டத்திற்கு அமைய இடங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.

SHARE