Thursday, January 24, 2019

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையர் சிக்கினார்

SHARE

“யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நகைகளைப் பெற்று அவற்றை உருக்கி விற்பனை செய்யும் சகாவும் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாள்களில் வழிப்பறிகளும் நகைக் கொள்ளைகளும் இடம்பெற்று வந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந்த நகைகளை உருக்கிக் கொடுக்கின்ற ஒருவரையும் இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்ட – கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் அவருக்கு போதைப் பொருளை பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைபடுவதாலேயே இவ்வாறு நகைக் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.






SHARE