Monday, January 28, 2019

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியவர் சில மாதங்களின் பின் சிக்கினார் – யாழில் சம்பவம்

SHARE

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய சந்தேகநபரை கோப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் வசித்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை ,விவாகரத்து பெற்ற பிரிந்து சென்றுள்ளார். அதனால் சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

அது தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இருந்த போதிலும் தாயார் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் தந்தையார் கடந்த நவம்பர் மாதமளவில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்த்தனர்.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைக்களை பொலிஸார் முன்னெடுத்த போது சந்தேகநபர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டுள்ளனர். அதனை அடுத்து சந்தேகநபரை இன்றைய தினம் திங்கள்கிழமை பொலிஸார் வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது ( வான் அடைமொழியுடன் அவரர் புனை பெயர் உண்டு) கைது செய்ததுடன் அவரது வானையும் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை நாளைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
SHARE