Monday, January 28, 2019

தொடர் வெற்றிகள்: உலகக் கோப்பைக்குத் தயாராகும் இந்திய அணி

SHARE

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்துள்ளது. மட்டை ஆதிக்கம் செலுத்தும் இந்நாளைய ஒருநாள் போட்டிச் சூழலில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு அணி வெற்றிபெற உதவினார்கள்.

டாஸை வென்று முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தள்ளாடியது. ராஸ் டெய்லரும் டாம் லேதமும் இணைந்து பொறுப்புடனும் பொறுமையாகவும் ஆடி அணியின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட உதவினார்கள். இவர்களது கூட்டணி 119 ரன்களைச் சேர்த்தது. 38ஆவது ஓவரில் லேதம் ஆட்டமிழந்த பின் அடுத்த 11 ஓவர்களில் 65 ரன் சேர்த்து அனைவரும் ஆட்டமிழந்தார்கள்.

244 என்னும் எளிய இலக்கை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி சிறிதும் பதற்றம் இன்றி, எந்தக் கட்டத்திலும் தடுமாற்றம் இன்றி, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணரின் துல்லியத்தோடு இலக்கை எட்டிப் போட்டியை வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்றதன் மூலம் தொடரையும் வென்றது.

தொடக்க இணையரான ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவனும் இணைந்து 39 ரன்களை எடுத்தார்கள். அடுத்து விராட் கோலியும் ரோஹித்தும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்கள். 29ஆவது ஓவரில் ரோஹித்தும் (62) 32ஆவது ஓவரில் கோலியும் (60) ஆட்டமிழந்த பிறகு இணைந்த அம்பத்தி ராயுடுவும் (40) தினேஷ் கார்த்திக்கும் (38) மற்றவர்களுக்கு வேலை வைக்காமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்கள்.

மட்டையாளர்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்தாலும், இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பே வெற்றிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது. முதல் போட்டியில் 157, இரண்டாவது போட்டியில் 234, மூன்றாவது போட்டியில் 243 ஆகிய ரன்களுக்கு நியூஸி அணியைச் சுருட்டியது இந்தியா வெற்றிபெறப் பெரிதும் காரணமாக அமைந்தது. மட்டை வீச்சு ஆதிக்கம் செலுத்தும் இன்றைய நாட்களில் இது அரிதான நிகழ்வுதான். முகம்மது ஷமி, புவனேஸ்வர் குமார், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் மூன்றாவது போட்டியில் இணைந்துகொண்ட ஹர்திக் பாண்ட்யாவும் சிறப்பாகப் பந்துவீசி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார்கள்.

கடந்த ஆண்டில் ஆசியாவுக்கு வெளியில் இந்தியா பெறும் மூன்றாவது தொடர் வெற்றி இது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அவ்வணிகளைத் தோற்கடித்த இந்தியா இங்கிலாந்திடம் மட்டுமே தொடரை இழந்தது.

இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கான பொருத்தமான தயாரிப்பாக இந்தப் போட்டிகளைக் கொள்ளலாம். மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் ஆகியோரின் சீரான ஆட்டம், தொடக்க நிலை ஆட்டம், இடை நிலை ஆட்டம், கடைசி ஓவர்களை ஆடுவது, நன்றாக ஆடுவதோடு, போட்டியை முடித்துவைக்கவும் வேண்டிய பயிற்சி ஆகியவற்றில் இந்திய மட்டையாளர்கள் தங்கள் திறனைப் பல முறை நிரூபித்துக்காட்டினார்கள். தொடக்க ஓவர்கள், இடையில் வீசப்படும் ஓவர்கள், கடைசிக் கட்டப் பந்து வீச்சு, வேகப் பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு, என எல்லா அம்சங்களிலும் பந்து வீச்சாளர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள். களத்தடுப்பிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. உலகக் கோப்பைக்கான முழுத் தயாரிப்புடன் இந்தியா இருக்கிறது என்று சொல்லலாம்.

1983இல் கபில் தேவ் தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் உலகக் கோப்பையை வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அதே இங்கிலாந்து மண்ணில் இந்த ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றால் அதில் மகிழ்ச்சிப் பரவசம் இருக்கும். ஆனால், யாருக்கும் வியப்பு ஏற்படாது. காரணம், இந்தியாவின் தற்போதைய வலிமையும் ஆட்டத் திறனும். கடந்த ஓராண்டில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பெற்ற வெற்றிகளே அதற்குச் சான்று.
SHARE