Friday, February 1, 2019

கௌதமன் விரைவுச் சதம் : சென்றலைட்ஸ் அணி 8 விக்கெட்களால் வெற்றி!

SHARE

சிறப்பான பந்துவீச்சு மற்றும் கௌதமனின் 59 பந்துகளில் பெறப்பட்ட 100 ஓட்டங்கள் என்பன கைகொடுக்க, சென்றலைட்ஸ் அணி 8 விக்கெட்களால் பெரு வெற்றிபெற்றது.

ஆளுநர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் கொண்ட சுற்றுப்போட்டியின் தெரிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் ஒரு போட்டியொன்றில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து வவுனியா யங் ஸ்ரார்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய யங் ஸ்ரார்ஸ் அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 159 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் ஆர்.தசரிதரன் 38 ஓட்டங்களையும், எஸ்.பிரசாத் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக ஜெரிக் துசாந்த் 9.4 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், தசோபன், டர்வின் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

160 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய சென்றலைட்ஸ் அணி, கௌதமனின் அதிரடிச் சதத்தின் உதவியுடன், 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. கௌதமன் 59 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரியலக்சன் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யங் ஸ்ரார்ஸ் அணி சார்பாக கோகுலன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
SHARE