Friday, February 1, 2019

”முறைப்பாடு கிடைக்கப் பெறாததால் அவரை தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை“

SHARE

“யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறாததால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை.

அவரை பொதுமக்கள் தாக்கியிருந்ததால் வைத்தியசாலையில் சேர்ப்பித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும்” என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சிறுமியைக் கடத்திச் செல்லும் நோக்குடன் நடமாடினார் என்று தெரிவித்து நாவாந்துறை சந்தைப் பகுதியில் வைத்து நபர் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது. அந்த நபரைப் பொறுப்பேற்ற பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டு சென்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், நேற்றுப் பிற்பகல் அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்த நபரை பொலிஸார் விடுவித்தமையை நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் மக்களின் விமர்சனத்தை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அந்த நபரை பொலிஸார் ஏன் தப்பிக்க அனுமதித்தனர்? என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது,

“மக்களால் பிடிக்கப்பட்ட நபருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெறவில்லை. அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அதனால் அவரைப் பாதுகாத்து தடுத்து வைத்திருக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை. பொதுமக்கள் அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருந்தனர்.

அதனால் வைத்தியசாலையில் சேர்ப்பித்து சிகிச்சை வழங்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அந்த நபரைத் தாக்கியவர்களைப் பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் எந்தவொரு நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை.

ஊடகங்கள் பொலிஸார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது. ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பொலிஸாரால் முடியும்” என்று  தெரிவித்தார்.
SHARE