Saturday, February 16, 2019

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

SHARE

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்ப் போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி த்ரில்லர் முறையில் வரலாற்று வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளனர். 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய நிலையிலேயே இறுதி விக்கெட்டுக்கான சாதனை இணைப்பாட்டத்துடன் இவ் வெற்றியை பெற்றுள்ளனர்.

முதலாவது இன்னிங்ஸ் –

இப்போட்டியில், முதலில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய தென்னாபிரிக்க அணி, இலங்கையின் பந்துவீச்சில் தடுமாறிய நிலையில் 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில் குயின்ரன் டி கொக் (80), தெம்பா பவுமா (47), பப்டு ப்ளசிஸ் (35) ஓட்டங்களை பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸ் –

அதனைத்தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை, வளமை போன்று சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து வெறும் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் (51), திமுத் கருணாரத்ன (30), லசித் அம்புல்தெனிய (24) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் டேல் ஸ்ரெயின் 4 விக்கெட்டுக்களையும், வரோன் பிளன்டர் மற்றும் காகிசோ ரபட ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்

மூன்றாவது இன்னிங்ஸ் –

இந்நிலையில், 44 ஓட்டங்களினால் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 259 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில் பப்டு ப்ளசிஸ் (90), குயின்ரன் டி கொக் (55), டீன் எல்கர் (35), ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இலங்கையின் பந்துவீச்சில் அறிமுக வீரர் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நான்காவது இன்னிங்ஸ் –

இதன்படி, 304 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நான்காவது நாளான இன்று 3 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தமது ஆட்டத்தை தொடர்ந்தது. குசல் பெரேரா மட்டும் நிலைத்து நின்று ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் என்று தடுமாறிக்கொண்டிருந்த அணிக்கு, குசலுடன் ஜோடி சேர்ந்த விஷ்வ பெர்னாண்டோ பக்கபலமாக நின்று ஓட்டங்களை குவிக்க உதவி புரிந்தார். இதன்மூலம் குசல் தனது முழுத்திறமையை பயன்படுத்தி நிச்சயம் தோல்வி தான் என்ற நிலையில் காணப்பட்ட அணியை மீட்டெடுத்து ஒரேயொரு விக்கெட்டால் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா (153-ஆட்டமிழக்காமல்), தனஞ்சய டி சில்வா (48), ஒசல பெர்னாண்டோ (37), லஹிரு திரிமன்ன (21), திமுத் கருணாரத்ன (20), விஷ்வ பெர்னாண்டோ (6-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் கேசவ் மஹாராஜா 3 விக்கெட்டுக்களையும், தன்னே ஒலிவியர், டேல் ஸ்ரெயின் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
SHARE