Friday, February 22, 2019

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு - ஒருவர் கைது!

SHARE

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் மேற்கு 6 யூனிற்றைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியானந்தன் (28 – வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளமையால், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


2ஆம் இணைப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் சரணடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE