Tuesday, February 26, 2019

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

SHARE

இயற்கையான போசாக்கு மிக்க மலிவான உணவுப்பொருட்கள் எத்தனையோ இருந்தும் பகட்டாக பக்கற்றுக்களிலும் பேணிகளிலும் அடைக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டுவரும் உணவுப்பொருட்களிற்கு அடிமைப்பட்டுப்போய் இருக்கிறோம். அவை தான் உண்மையான சத்துள்ள உணவுகள் என்று எண்ணிக்கொள்கிறோம். மாற்றுக்கருத்துக்களைக் கேட்கும் மனநிலையில் நாம் இல்லை. அவ்வளவு தூரம் இந்த இறக்குமதிப் பொருட்கள் எம் மனதை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன.

வைத்தியரைச் சந்திக்கும் பொழுது, பொதி செய்யப்பட்டுவரும் சில மா வகைகளைக் குறிப்பிட்டு இதனைச் சாப்பிடலாமா? அதனைச் சாப்பிடலாமா? என்று கேட்காதவர்கள் யாருமில்லை என்ற நிலை தோன்றியிருக்கிறது. விலை உயர்ந்த, அந்த விலைக்குப் பெறுமதி இல்லாத இந்த உணவு வகைகள் எங்கிருந்து படையெடுத்து வந்து எம்மை இப்படி ஆக்கிரமித்துக்கொண்டன? விளம்பரங்களும் கண்களைப் பறிக்கும் விதத்தில் பொதி செய்யப்பட்டிருக்கும் அந்த அழகும் அவற்றின் நறுமணங்களும் எம்மை இலகுவில் ஏமாற்றி அடிமைப்படுத்தி விடுகின்றன.

பொதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுவரும் உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றையும் வாங்கும் பொழுது யாருக்கோ நாம் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணூறு ரூபாவிற்கு ஒரு மாப்பேணியை வாங்கி உண்ணும் பொழுது முந்நூறு ரூபா எம்மில் செறிகிறது. மிகுதி ஐந்நூறு ரூபாவும் நாம் செலுத்தும் கப்பம். இந்த எண்ணூறு ரூபாவிற்கு உழுத்தம் மாவோ, பயற்றம் மாவோ அல்லது முட்டை மாவோ செய்து சாப்பிடுவோமாயின் அந்த எண்ணூறு ரூபாவும் எம்மில் செறியும்.

குளிர்பான வகைகளும் சோடா வகைகளும் வந்து, எமது பாரம்பரிய தேசிக்காய்த்தண்ணீர், இளநீர், குத்தரிசிக்கஞ்சி, மோர் போன்றவற்றினை அடித்துத் துரத்தி ஏளனத்துக்குரியவையாக்கிவிட்டன. இவற்றில் இருக்கின்ற இயற்கையான, உண்மையான, பாதுகாப்பான ஊட்டச்சத்துக்கள் மறக்கப்பட்டுவிட்டன.

முருங்கை இலை, வாழைப்பொத்தி, அகத்தி இலை, அகத்திப்பூ, சிறகவரை, சண்டி இலை, தூதுவளை போன்றவை மருந்துகள்படாத இயற்கையான ஊட்டச்சத்துள்ள மரக்கறி வகைகள். இவற்றையெல்லாம் நாம் வெறுத்து ஒதுக்கிவிட்ட காரணம் என்ன?

முட்டை மிகவும் பாதுகாப்பான, ஒப்பீட்டளவில் மலிவான, அதி உச்ச புரதச்சத்துள்ள உணவாகும். இதனை ஆபத்தான உணவு என்று மனதில் வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். நான் பயந்து முட்டை சாப்பிடுவதில்லை என்று சொல்லிக்கொண்டு பொதி செய்யப்பட்ட மா வகைகளைக் கரைத்துக் குடிக்கிறோம். கொலஸ்ரோல் நோய் அற்றவர்கள் எவ்வளவு முட்டைகளையும் உண்ண முடியும். இது உடலுக்கு நல்லது. கொலஸ்ரோல் நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வரை உண்ண முடியும். முட்டை வெள்ளைக்கருவை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம் இது உடலுக்கு அதி சிறந்த வகையான புரதச்சத்தைக் கொடுக்கிறது.

ஒரு பொருளைப் பேணியிலோ அல்லது போத்தலிலோ பொதிசெய்ய முன்பு அது பலவிதமான வெப்பநிலை மாற்றங்களுக்கும் உலர்த்துதல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றது. இதன் போது அதன் இயற்கையான மூலக்கூறுகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் இவை பழுதுபடாமல் இருப்பதற்காக இவற்றிற்குப் பல்வேறுபட்ட இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. அத்துடன் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் மற்றும் சில பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு பொதி செய்யப்பட்டுவரும் இந்தக் கலவைகளின் காலடியில் தான் நாம் வீழ்ந்து கிடக்கிறோம்.

மேலைத்தேச நாடுகளில், இயற்கையான பொருட்களிற்கு மதிப்பு அதிகம். அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருந்தும் அதிக விலை கொடுத்து இயற்கையான உணவுகளை வாங்க எத்தனை முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் எம்மைச் சுற்றி மலிவான இயற்கையான பொருட்கள் எவ்வளவு இருந்தும் அதிக விலை கொடுத்து பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்க ஆசைப்படுகின்றோம். “கழுதை அறியுமா கற்பூர வாசனை” என்ற பழமொழி ஞாபகம் வருகின்றது.

அந்தக் கற்பூர வாசனையை அறிந்து கொள்ள நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது. இயற்கையான உணவு வகைகளின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம். இதன் மூலம் நாம் அநாவசியமான பணச்செலவுகளைக் குறைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேணி, நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.
SHARE