Saturday, February 2, 2019

ஆவா குழுவை அடக்கிவிட்டோம்; தலைமறைவாகவுள்ளோர் சரணடையவேண்டும் – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

SHARE

“வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோரை கைது செய்ததன் மூலம் அதன் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்திவிட்டோம். எனினும் சிலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையங்களிலோ அல்லது நீதிமன்றங்களிலோ சரணடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்”

இவ்வாறு வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கில் அச்சுறுத்தல் மிக்கதாக கடந்த காலங்களில் ஆவா என்ற வன்முறை குழு காணப்பட்டது. ஆனால் தற்போது அதில் ஒரு சிலரை தவிர ஏனையோரை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளோம். ஆனால் அவர்களில் சிலர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மறைந்திருக்கும் ஆவா குழு உறுப்பினர்களுக்கு நாம் ஒரு கோரிக்கை விடுகின்றேன். அதாவது அவர்களையும் பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் சரண்டைந்து உங்களது வழக்குகளை முடிவுறுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு அந்தந்த நாடுகளின் அரசிடம் கோரவுள்ளோம். இந்நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது – என்றார்.

 
SHARE