Saturday, February 23, 2019

இலங்கை வரலாற்று வெற்றி - தொடரை கைப்பற்றியது!

SHARE

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவந்தது. இந்நிலையில், டெஸ்ட் தரப்படுத்தலில் இரண்டாவது அணியாக இருக்கும் தென்னாபிரிக்காவை, அவர்களது சொந்த மண்ணில் வைத்து முதல்முறையாக 2-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி குசல் பெரேரா – விஷ்வ பெர்னாண்டோ ஜோடியின் சாதனை இணைப்பாட்டத் துணையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கின்றது.

இப்போட்டியின் போக்கு ஆரம்பம் முதல் எந்த அணிக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை தீர்மானிக்க முடியாத அளவிற்கு இரு அணிகளும் சவாலாக செயற்பட்டது. எனினும், தென்னாபிரிக்க அணியை இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 128 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததுடன். தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை 5 டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்த இலங்கை அணி ஒரு தொடரையும் வெற்றி கொண்டிருக்கவில்லை. இந்நிலையில், புதிய தற்காலிக தலைவரான திமுத் கருணாரத்ன தலைமையில் இத் தொடரை இலங்கை அணி முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்திருக்கின்றது. அத்துடன், இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களை அடுத்தடுத்து பறிகொடுத்து தோல்விகளில் துவண்டு போயிருந்த இலங்கை அணி மீது வெறுப்பு மனநிலையில் இருந்த ரசிகர்களுக்கும் விருந்து வைத்திருக்கின்றனர்.

போட்டியின் நிலவரம்

முதலாவது இன்னிங்ஸ் –

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 222 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், குயின்ரன் டி கொக் (86), அய்டன் மார்க்ரம் (60) ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸ் –

தமது முதல் இன்னிங்ஸ்ஸில் ஆடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் நிரோசன் டிக்வெல்ல (42), லகிரு திரிமன்ன (29) ஓட்டங்களை பெற்றனர்.

தென்னாபிரிக்கவின் பந்துவீச்சில் காகிசோ ரபட 4 விக்கெட்டுக்களையும், தன்னே ஒலிவியர் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

மூன்றாவது இன்னிங்ஸ் –

68 ஓட்டங்களினால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்கா தமது இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 128 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் பப்டு ப்ளஸிஸ் (50*), ஹசிம் அம்லா (32) ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கையின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 3 மற்றும் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நான்காவது இன்னிங்ஸ் –

இதனைத்தொடர்ந்து 197 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, குசல் மென்டிஸ் – ஒசத பெர்னாண்டோ ஜோடியின் அற்புதமான (153-ஓட்டங்கள்) இணைப்பாட்டம் மூலமாக 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 45.4 ஓவர்களில் வெற்றியிலக்கைத் தொட்டது. துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் (84*), ஒசத பெர்னாண்டோ (79*) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
SHARE