Tuesday, February 26, 2019

உங்கள் உடல்நிறையைக் குறைத்துக்கொள்வது எப்படி?

SHARE

எமது உடல் நிறையை சரியான அளவில் பேணிக் கொள்வதும் ஒரு கலையே! திருமூலர் திருமந்திரத்திலே “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்” என்று சொல்லி உடலை ஆலயத்துடன் ஒப்பிட்டிருக்கின்றார். அந்த ஆலயத்தை அழகுற பராமரிப்பது கலை மட்டுமல்ல எமது கடமையுமாகும்.

“ உடல் நிறையை குறைப்பது இயலாதகாரியம், பட்டினிகிடக்க வேண்டி வரும், நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்” என்ற ஒரு தப்பவிப்பிராயம் பொதுவாக நிலவிவருகிறது.

மிகவும் சிறிதளவு உணவை உட்கொண்டும் கூட நிறை தானாகக் கூடிவருகிறது. எவ்வளவு வேலைகளைச் செய்தும், உடற்பயிற்சி செய்தும் நிறை குறைவதாகத் தெரியவில்லையே! என்று எல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றோம்.

“இது பரம்பரை உடம்பு, இதனைக் குறைக்கவே முடியாது எனது நிறை நெடுகவே இப்படித்தான்” என்று சொல்லி திருப்பதிபட்டுக் கொள்ள முனைகின்றோம்.

“சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பருத்திருப்பதே பலம், நிறை குறைந்து போனால் உடல் பலவீனப்பட்டு விடும், உடல் அழகு கெட்டுவிடும்” என்று பயப்பட்டுக் கொள்கின்றோம்.

“கொழு கொழு என்று இருப்பது தான் அழகு” என்று தனது பருத்த உடலைப்பார்த்து பூரித்துபோய் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்.

“உணவை கட்டுப்படுத்தி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா? பக்கத்து வீட்டு அம்மம்மா பருத்த உடம்புடன் 10 பிள்ளைகளையும் பெற்றெடுத்து பல காலம் வாழவில்லையா? உணவை ஒறுத்து வாழ்வதன் அர்த்தம் என்ன? என்று எல்லாம் எத்தனை விதமான எண்ணங்கள் மனதில் தோன்றிமறைந்து கொண்டிருக்கின்றன.

“உணவை வீணடிக்கக் கூடாது, கடவுளுக்கு ஏற்காது” என்று எண்ணி மிச்ச சொச்ச உணவுகளை எல்லாம் உண்டு பருத்து உடம்பு வீணாகிப்போய் நோய்களை தேடிக்கொண்டவர்கள் எத்தினைபேர்?

“நான் மற்றவர்களுடன் ஒப்பிடும்பொழுது சாப்பிடுவது மிகவும் குறைவு ஆனால் நிறை தானாக அதிகரித்து வருகிறதே!” என்று வேதனைப்படும் மனங்கள் எத்தனை?

“நல்லாய் சாப்பிடு, நல்லா வேலை செய், நிறை தானாகக் குறையும்” என்று பலரின் அறிவுரைகளைக் கேட்டு ஏமாந்து போனவர்கள் எத்தனை பேர்.

“எனது நிறையைக் குறைக்கவே முடியாது” என்ற தீர்மானத்திற்கு வந்து மனம் சோர்ந்து போனவர்கள் எத்தனை பேர்?

ஏன் நாம் உடல்நிறை குறைப்பு என்ற இந்த இலகுவான கலையை கற்றுத் தேற முடியாது? அதிகரித்த உடல் நிறை என்ற பிரச்சனையை சரியான திசையில் அணுகுவோமாயின் அதனை வெற்றிகொள்வது மிகவும் இலகுவானது.“கண்டதும் கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதும் உண்டவன் பண்டிபோல் குண்டாவான்” என்று பலரும் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறிவைத்திருக்கிறார்கள். எனவே நாம் எம் முன்னவர்களின் கருத்துக்களையும் கருத்தில் எடுத்து. ஆரோக்கியமாக சுவையாக நிறைவாக உண்டு எமது நிறையை சரியான அளவில் பராமரிக்கும் கலையை கற்றுக்கொள்ள முயலுவோம்.

நிறையை குறைத்துக் கொள்வதற்கு பட்டிணி கிடக்கவேண்டிய அவசியமில்லை. பட்டிணி கிடந்து நிறையை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. நிறை குறைப்பதற்கு முயற்சி எடுக்கும் காலத்திலே ஆரோக்கியமான உணவுவகைகளை உண்ணுவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த காலத்திலே சுவையான உணவுவகைகளை உண்ண முடியாது என்று தப்பவிப்பிராயமும் கொள்ளத் தேவையில்லை. சரியான நடவடிக்கைகள் மூலம் உடல் நிறையை குறைத்தால்,வரும் காலங்களில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பயப்படவேண்டிய அவசியமும் இல்லை.

உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு பல்வேறு தரப்பினரிடையேயும் குறிப்பாக இளம் வயதினரிடையே மேலோங்கிவருவது ஒரு நல்ல அறிகுறியாகும். உடல் நிறையை குறைத்துக்கொண்ட பலர் களைப்பு நீங்கி மூட்டு நோ, நாரிநோ என்பன குறைத்து பல்வேறுபட்ட நோயின் தாக்கங்கள் குறைந்து பாவிக்கும் மருந்துகளையும் குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வது மேலும் பலரை நிறைகுறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

ஒருவர் அளவான உடல்நிறையை பேணுவது அவர் வாழும் காலத்தை அதிகரிக்கச் செயவதுடன் அவரின் செயற்திறனையும் கூட்டும் என்பது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதிகரித்த உடல்நிறை பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்ற விடயத்தை பொதுவான அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் நிறையை சரியாக அளவில் பேணாதவர்களுக்கு நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், பாரிசவாதம், மூட்டு சம்பந்தமான நோய்கள், நாரி சம்பந்தமான நோய்கள், புற்று நோய்கள், மாரடைப்பு, நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், கற்பம் தரிப்பதில் தாமதம், குடும்ப வாழ்வில் ஆரோக்கிய குறைவு போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

ஒருவருக்கு நிறையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது சம்பந்தமான தெளிவும் ஏற்படுமாயின் நிறையை கட்டுப்பாட்டிடிற்குள் கொண்டுவருவது மிகவும் இலகுவானது.

உடல்நிறையை குறைத்துக்கொள்வது மட்டும் எமது இலக்காக இல்லாது எமது உடலின் ஆரோக்கியத்தையும் தொழிற்பாட்டு வீதத்தையும் அழகையும் மேம்படுத்தி உடல்நிறையை குறைத்துக்கொள்வது எவ்வாறு என்று சிந்திக்க வேண்டும். இதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் இன்றியமையாதவையாக அமைகின்றன.

உடல்நிறையை குறைப்பதற்கு எந்த வகையான உணவுவகைகளை தெரிவுசெய்ய வேண்டும் என்று சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்துவதாக இருந்தால் ”அந்த உணவுவகைகள் உடல்நிறை அதிகரிப்பை ஏற்ப்படுத்தாத கலோரிப் பெறுமானம் குறைந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுவையான, பசியைபோக்கி திருப்தியை கொடுக்கவல்ல உணவு வகைகளாக இருக்க வேண்டும்” என வரையறுக்கலாம். இந்த வகையான உணவுவகைகளை தெரிவு செய்தால் மாத்திரமே எமது நிறைகுறைப்பு முயற்சியை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் முன்னெடுக்க முடியும். பசிகிடந்து, பட்டிணி கிடந்து துக்கப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, கவலைப்பட்டு, வெக்ப்பட்டு, வேதனைப்பட்டு செய்யும் நிறைகுறைப்பு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்காது. இதற்கு மாறாக ஓட்டகங்கள் போல ஓரேயடியாக உண்டு எதிர்காலத்திற்கு தேவையான உணவையும் உடலிலே சேமித்துவைக்க முயன்றால் அதுவும் உடல்நலத்திற்கு நல்லதல்ல.

சரியான உணவுவகைகளை தெரிவுசெய்து உண்ணுவோமாயின் உடலின் வினைத்திறன் அதிகரிப்பதுடன் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஊக்கமும் பிறக்கும்.

சில சமயம் உடல்நிறை அதிகரிப்பு சில நோய்களின் அறிகுறியகவோ அல்லது சிலவகை மருந்துகளின் பாவனை காரணமாகவோ இருக்கலாம். அதிகரித்த உடலிநிறை காரணமாக சிலருக்கு சில நோய்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை கண்டறியப்பட வேண்டும். ஆனால் அனேகமானவர்களில் தவறான உணவுப் பழக்கங்களும் போதிய பயிற்சி இன்மையுமே இந்தப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன.

உடல்நிறை குறைப்ப நடைமுறைப்படுத்துவதற்கு தடைக்கல்லாக ஒரு விடயம் பொதுவாக நிறைகூடிய அனைவரிலுமே காணப்படும். அந்த தடைக்கல் அடையாளம் காணப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதுவே நிறைகுறைப்பு நடவெடிக்கையின் முதலாவது படிநிலை. இந்த தடைக்கல் அகற்றப்பட்டால் மட்டுமே நிறை குறைப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அளவான உடல் நிறையை தொடர்ந்து பேணமுடியும்.

அது என்ன தடை்கல்? அதை எவ்வாறு அடையாளப்படுத்தி அகற்றுவது?

“நான் உணவு விடயத்திலே கவனமான ஒருவர். உண்ணும் அளவு எவ்வளவோ குறைவு, சில வேளைகளில் உண்ணுவதே இல்லை, பல உணவு வகைகளை தவிர்த்துவிட்டேன். நிறை ஏன் அதிகரித்து வருகின்றது. என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது” என்று எண்ணிக்கொள்ளும் ஒரு ஆழமான மன உணர்வே அந்த தடைக்கல் ஆகும்.

”உணவு விடயத்தில் எங்கோ தவறு நடக்கிறது. இதுவே நிறை அதிகரிப்பிற்கு அடிப்படை. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்ற விடயத்தை அவர்களது மனது ஏற்றுக்கொள்ள மறுக்கும். நிறை அதிகரிப்பிற்கு வேறு ஒரு விடயம் தான் காரணம் என நிறுவ மனம் எத்தனிக்கும்.

இந்த தடைக்கல்லை தகர்த்து எறிவதற்கு உணவு வகைகளின் கலோரிப் பெறுதானங்கள் பற்றி அறிவும் எமது உடலின் கலோரி தேவைகள் பற்றிய அறிவும் பேருதவியாக அமையும்.

சுவை குன்றாமல் நிறை அதிகரிக்காமல் எவற்றை உண்ண முடியும் என்பதையும் சிறிய அளவு உட்கொண்டாலும் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்ல அதாவது கலோரி பெறுமானம் கூடிய உணவு வகைகள் எவை என்பதையும் நாம் அடையாளப்படுத்த வேண்டும். கலோரிப் பெறுமானம் கூடிய உணவுவகைகளை தவிர்த்து அவற்றிற்கு மாற்றீடாக எவற்றை உண்ணமுடியும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

சீனி, சர்க்கரை, பனங்கட்டி அல்லது இவை சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் அல்லது பானங்கள் போன்றவற்றை சிறிதளவு உட்கொண்டாலும் பெரும் நிறை அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. காரணம் இவற்றில் இருக்கும் கலோரி அடர்த்தி அதிகமாகும். எனவே இவற்றை மனநிறைவுடனும் மன ஊக்கத்துடனும் தவிர்க்க முடியுமாயின் தவித்து விடுவது நல்லது. இது உங்கள் ஆரோக்கியம் நோக்கிய பயணத்தின் ஒரு முக்கிய படிக்கல்லாக அமையும்.

இனிப்பை தவிர்த்து எப்படி வாழ்வது? இனிப்பு இல்லாமலும் ஒரு வாழ்க்கையா இனிப்பு சுவை எனக்கு எப்படியும் வேண்டும். என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள் அதனை தவறான சிந்தனை என்று சொல்லிவிட முடியாது. எனவே இவர்கள் சீனி, சர்க்கரை, பனங்கட்டி என்பவற்றிற்க்குப் பதிலாக இனிப்பூட்டிகள் அல்லது சுவையூட்டிகளை பயன்படுத்தலாம். இவற்றின் சுவை சீனியை ஒத்ததாக இருக்கும் ஆனால்நிறை அதிகரிப்பு எதனையும் ஏற்படுத்தாது. நீரிழிவு உள்ளவர்கள் பலர் இந்த இனிப்பூட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு இல்லாதவர்களும் இதனைப் பயன்படுத்த முடியும். சீனி, சர்க்கரை, பனங்கட்டி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இந்த இனிப்பூட்டிகள் பாதுகாப்பானவை மட்டுமல்ல நிறை அதிகரிப்பையும் ஏற்படுத்தமாட்டாது. பல்வேறு வகையான இனிப்பூட்டிகள் பல்வேறு வடிவங்களில் விற்பனையாகின்றன. இவற்றை தேனீருக்கு மட்டுமல்ல பால், சிற்றுண்டிவகைகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்த முடியும்.

போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சோடா, பழரசவகைகள் போன்றவற்றில் சீனியின் செறிவு மிகவும் அதிகமாகும் இதனால் இவற்றிகு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தும் தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது. எனவெ இவற்றின் பாவனை தவிர்க்கப்பட வேண்டும். இவற்றிற்கு பதிலாக இளநீர்,சுவையூட்டி சேர்த்த தேசிக்காய் தண்ணீர், வீட்டில் தயாரித்த பழரசங்கள், தேநீர், கோப்பி, பால், போன்றவற்றை பயன்படுத்த முடியும்.
இதே போன்று எண்ணெய் அல்லது எண்ணெயில் பொரித்த உணவுவகைகளும், பட்டர், மாஜறீன் போன்றவையும் சிறிய அளவு உணவில் சேர்த்தாலும் அதிகளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்லன அதாவது இவற்றில் கலோரிச் செறிவு அதிகமாகும். நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகள் உட்பட எல்லா எண்ணெய் வகைகளும் நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்லன. மிக்சர், வடை, ரோல்ஸ் ஏனைய பொரியல்வகைகள், தேங்காய் அதிகளவு சேர்த்த உணவுவகைகள், எண்ணெய் சேர்த்துச் செய்யும் உணவுவகைகள் போன்றவற்றில் எண்ணெயின் வீதம் அதிகமாக இருப்பதால் இவற்றில் சிறிதளவை உட்கொண்டால் கூட பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

எனவே பொரித்த உணவுவகைகளுக்கு பதிலாக அவித்த அல்லது பேக் செய்யப்பட்ட அல்லது கிறில் / ரோஸ்ற் செய்யப்பட்ட உணவுகளை தெரிவுசெய்வது நல்லது. முற்றிய தேங்காய்களிலும் பார்க்க முட்டுக்காய் தேங்காய்களில் கலோரிப்பெறுமானம் குறைவாகக் காணப்படுகின்றது. எனவே முட்டுக்காய் தேங்காய்களை அளவுடன் சேர்க்க முடியும். வாசனைத்திரவியங்கள், தூள், மல்லி, வெந்தயம் உள்ளி போன்ற நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டா எனவே இவற்றை சமையலில் போதுமான அளவு சேர்த்துக்கொள்ள முடியும்.

சிலவகையான சுவையான உணவுகளை அதிகளவு உட்கொண்டாலும் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. எனவே உணவிலே அவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பசிவந்திட பத்தும் பறந்து போகும் என்று சொல்லுவார்கள். இது முற்றிலும் உண்மையானதே. காரணம் மூளையில் இருக்கும் பசியுடன் சம்பந்தமான பகுதி மிகவும் வல்லமை பொருந்தியது. நிறை குறைக்க முற்படும் காலத்திலே ஒருவருக்கு பசி ஏற்படுமாயின் அது அவரின் நிறை குறைப்பு சம்பந்தமான அறிவையும் நிறைகுறைக்கு வேண்டும் என்ற ஆர்வத்தையும் அற்றுப்போகச் செய்துவிடும். எனவே இந்தக் காலப்பகுதியிலே பசி ஏற்ப்படாதவாறு நிறை அதிகரிப்பை அதிகம் ஏற்ப்படுத்தாத உணவுகளை அடிக்கடி உண்பது அவசியமாகும்.

சிலவகையான உணவுவகைகளை அதிகளவு உண்டாலும் சிறிதளவு நிறை அதிகரிப்பையே ஏற்படுத்தும். ஆனால் வேறுசிலவகையான உணவுவகைகள் சிறிதளவு உட்கொண்டாலும் கூட பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்த வல்லன. இதற்கு காரணைம் அவற்றில் அடங்கியிருக்கும் சக்தி அல்லது கலோரிப்பெறுமானம் ஆகும். சுவையான மலிவான கலோரிப்பெறுமானம் குறைந்த உட்டச்சத்து நிறைந்த உணவுவகைகளை தெரிவுசெய்து உண்பதும் ஒரு கலையே. இதுவே நிறை குறைப்பின் அடிப்படைத்தத்துவமுமாகும். இத்துடன் உடற்பயிற்சியும் செய்துவருவோமாயின் எமது இலக்கை விரைவில் வெற்றிகரமாக அடைய முடியும்.

உதாரணத்திற்கு சிறிதளவு உட்கொண்டாலும் அதிகளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தவல்ல எண்ணெய் இன் நிறை அதிகரிப்பு வீதத்தை மற்றய சில உடணவுப்பொருட்களுடன் ஒப்பிடுவோமாயின் வெறும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் இன் நிறை அதிகரிப்பு வீதமானது 400ml இளநீருக்கு அல்லது 250 கிராம் பயற்றம் காய்க்கு அல்லது 250 கிராம் ஜம்பு பழத்திற்கு அல்லது 100 கிராம் இறைச்சிக்கு அல்லது 550 கிராம் வத்தகைப்பழத்திற்கு அல்லது 250 கிராம் வெண்டிக்காய்க்கு, அல்லது 150 கிராம் அப்பிளிற்கு அல்லது 100 கிராம் மீனுக்கு அல்லது 750 கிராம் காளானிற்கு அல்லது 350 கிரம் முருங்கக்காய்ற்கு அல்லது 100 கிராம் இறாலிற்கு சமமானதாகும். எனவே எண்ணையை தவிர்த்து அவற்றிற்க்கு பதிலாக இவற்றை உண்போமாயின் இவை பசியை நல்லமுறையில் கட்டுப்படுத்த உதவுவதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்துகள் பலவற்றையும் வழங்கும். அத்துடன் சுவைபட இவற்றை கலைத்துவமாக சமைத்தெடுக்க முடியும். வாசனைத்திரவியங்கள், தூள் மல்லி என்ப போதியளவு சேர்த்துக்கொள்ள முடியும் இவை அதிக நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது.

மேலே குறிப்பிடப்பட்டிருப்பது வெவ்வேறு வகை உணவுகளின் நிறை அதிகரிப்பு வீதங்களை ஒப்பிட்டுபார்ப்பதற்க்கான ஒரு உதாரணமே. அத்துடன் ஒரு சிறிதளவு எண்ணெய் எவ்வளவு பெரிய நிறை அதிகரிப்பை ஏற்படுத்தவல்லது என்பதை அறிந்துகொள்வதற்கும் இது உதவியாக அமைகிறது. மிக்சர், வடை,ரோல்ஸ்,ரோட்டி போன்றவற்றில் பொதிந்திருக்கும் எண்ணெய் நம்மில் பலருக்கு நிறை அதிகரிப்பை ஏற்ப்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

நிறை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் சுவைக்காகவும் பசியை போக்குவதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அடிக்கடி உண்ணக்கூடிய உணவுவகைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
பழவகை குறிப்பாக கொய்யா, தோடை, அப்பிள், ஜம்பு, விழாம்பழம்,பப்பாசி, வாழைப்பழம்,நாவல்,போன்றன அத்துடன் எல்லாவிதமான மரக்கறிவகைகள் குறிப்பாக அகத்தி, முருங்கை, கோவா,கரட்,பீற்றூட், தக்காளி, முள்ளங்கி,கீரைவகை, பயிற்றை,வெங்காயம்,போஞ்சி,சிறகவரை,லீக்ஸ் போன்றவை இத்துடன் பானங்களான மோர், இனிப்பூட்டிகள் சேர்த்த சீனி சேர்க்காத தேனீர், கோப்பி, பால், தேசிக்காய் தண்ணீர், குத்தரிசி கஞ்சி, தோடம்பழச்சாறு, இளநீர் போன்றவற்றை குறிப்பிடலாம்.

நம்மில் பலர் “மாப் பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பது எமக்குத் தெரியாது. இந்த நிலை பல நோய்களுக்கு காரணமாக அமைவதுடன் நிறை அதிகரிப்பிற்கான முக்கிய காரணமாகவும் அமைகின்றது. புகைத்தலுக்கு அடிமையாகி, குடிவகைகளுக்கு அடிமையாகி, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கின்றோம். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பாதித்து பல மரணங்களுக்கும் தாக்கங்களுக்கும் காரணமாக இருக்கின்ற “மாப்பொருள்களுக்கு அடிமையாதல்” என்ற நிலை பற்றி நாம் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக இருக்கின்றது.

மாப்பொருள் என்றால் என்ன? மாப்பொருளுக்கு அடிமையாதல் என்றால் என்ன? என்பது பற்றி நாம் அறிந்துவைத்திருத்தல் அவசியமாகும், மாப்பொருள் அதிகமுள்ள உணவுகளாக சோறு, பிட்டு, சீனி, இடியப்பம், பாண், ரொட்டி குரக்கன்மா அல்லது ஆட்டாமா என்பன சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

நாம் இந்தவகையான உணவுகளுக்கு அடிமையாகி இருக்கின்றோமா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

மாப்பொருளிற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு மேற்கூறப்பட்ட பொருட்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குத் தவிர்த்துவிடமுற்பட்டால் கூட களைப்பாக இருக்கும். நடுங்கும், வழமையான வேலைகளைச் செய்யமுடியாது இருக்கும், இலகுவில் கோபம் வரும், இந்த அறிகுறிகளை பால், முட்டை, பழங்கள், பருப்புவகைகள், மோர், சுண்டல் போன்ற ஆரோக்கியமான சுவையான உணவுவகைகளால் கூட தணிக்க முடியாமல் இருக்கும். இறைச்சி, மீன், இறால் போன்ற மாமிச உணவு வகைகளால் கூட இந்த அறிகுறிகளை தணிப்பது கஷ்டமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட மாப்பொருள் வகை உணவுகளைத் தேடி சிறிதளவாவது உண்ணவேண்டும் என்ற பெரும் ஆவல் மனதிலே தோன்றும். மாப்பொருள் இல்லாத உணவும் ஒரு உணவா? சோறு, பிட்டு உண்ணாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ளும். பால் பழம், சுண்டல், பால் சேர்த்த தேனீர், கோப்பி, அவித்த அல்லது சமைத்த மரக்கறிவகைகள், முட்டை, பருப்பு, இறைச்சிவகைகள், அகத்தி, முருங்கை,வெங்காயம் போன்றவற்றின் வறைகள், கௌப்பி,பயறு போன்ற சுவையான உணவுவகைகளைக் கூட உணவாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும். மாப்பொருள் உண்டால் தான் ஒரு நேர உணவு உண்டதாக மனம்திருப்தி கொள்ளும். மாப்பொருள் அதிகமுள்ள உணவுவகைகள் தனது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தும், மனம் அதையே நாடும். இத்தகைய ஒரு நிலையையே மாப்பொருளுக்கு அடிமையாதல் என்று வரைவைிலக்கணப்படுத்தலாம்.

எமது உடலின் அன்றாட தொழிற்பாட்டிற்காக 55 வீதம் தொடக்கும் 60 வீதம் வரையிலான மாப்பொருள் தேவையாக இருக்கின்றது. எமக்குத் தேவையான இந்த மாப்பொருளை எந்த வகையான உணவுகள் மூலம் பெற்றுக்கொள்வது ஆரோக்கியமாக இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். மாப்பொருள் காணப்படும் ஆரோக்கியமான உணவுவகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

பழங்கள்
அவரைவகை மரக்கறிகள்
பருப்புவகைகள்
உழுந்து
பயறு
கௌப்பி
கரட், பீற்றூட், பூசணி

போன்ற மரக்கறி வகைகள் இந்த வகையான உணவுவகைகளை உண்பதன் மூலம் எமக்குப் போதுமான மாப்பொருளைப் பெற்றுக்கொள்வதுடன் உடலுக்கு வேண்டிய புரதம் கனியுப்புக்கள், விட்டமின்கள் போன்றவற்றையும் சேர்த்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையான உணவுவகைள் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டா. காரணம் இவற்றில் உள்ள கலோரி அடர்த்தி அதிக மாப்பொருளைக் கொண்ட உணவுவகைகளுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவாகும்.

எனவே நாம் மாப்பொருளிற்கு அடிமையாகி உள்ள நிலையிலிருந்து விடுபட்டு உடல் நிறையை குறைத்து ஆரோக்கியம் பெறுவதற்கு, முதலாவதாக இந்த நிலை எம்மில் இருக்கின்றது என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இரண்டாவதாக மாப்பொருள் செறிவு கூடிய உணவுகளைத் தவிர்த்து மாப்பொருள் செறிவு குறைந்த புரதச்செறிவு கூடிய உணவுகளைத் தெரிவு செய்து உண்ண வேண்டும். எமது வாழ்க்கை முறையை சுறுசுறுப்பானதாக மாற்றியமைத்து உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விலைகூடிய செயற்கை உணவுகளை தவிர்த்து விலைகுறைந்த இயற்கை உணவுகளை தெரிவுசெய்ய வேண்டும்.

உடல்நிறைக்குறைப்பு என்ற கலையை வெற்றிகரமாக அரகேற்றுவதற்கு நாம் கடந்து செல்லவேண்டிய முக்கியமான படிநிலைகள் எவை என்பதை அறிந்துவைத்திருப்பது அவசியமாகும் அவற்றில் சில முக்கியமான படிநிலைகள் வரிசைப்படுத்துவோமாயின்

1. “நான் உண்பது மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது எவ்வளவோ குறைவு ஆனால் நிறை தானாக அதிகரித்து வருகின்றது” என்ற தப்பவிப்பிராயத்தை நீக்குதல் வேண்டும். நாம் உண்ணும் உணவின் அளவை மற்றவர்கள் உண்ணும் அளவுடன் ஒப்பிட முடியாது காரணம் ஒவ்வொரு உடம்புக்குமான உணவுத்தேவை வேறுபடும்.

2. ”இது பரம்பரை உடம்பு அல்லது உடம்புவாசி இதனைக்குறைக்கவே முடியாது” என்று சலித்துக்கொள்வதைத் தவிர்த்துவிடல் வேண்டும். முயன்றால் அனைவராலும் சரியான உடல்நிறையைப் பேண முடியும்.

3. ”பசி பட்டிணி கிடந்துதான் மெலிய வேண்டும்” என்று பயப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” போதிய சுவையான ஆரோக்கியமான உணவுவகைகளை உட்கொண்டு நிறையைக் குறைத்துக்கொள்ள முடியும்.

4. பசிக்காத வேளைகளில் உண்ஓவதைத் தவிர்க்கவேண்டும் ”பசிக்கவில்லையே” செமிக்கவில்லையே! என்று கவலைப்படும் பருத்த உடம்பு உள்ளவர்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம்.

5. உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டும் நிறையைக் குறைத்துவிடலாம் என்ற தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும். உடற்பயிற்சி நிறைகுறைப்பிலே 10 வீதமாக பங்களிப்பையே வகிக்கிறது. ஆனால் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகதாக இருப்பதால் உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியை செய்து நிறையைக்குறைத்துக் கொள்வது நல்லது.

6. உணவு வீணாகப்போகிறதே என்ற உணர்வில் மிகுதி உணவுகளை உண்ணும் பழக்கத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பசிக்காத வேளைகளில் மிகுதி உணவை உண்டால் உடம்புதான் வீணாகிப் போகும்.

7. பிறரின் வற்புறுத்தலிற்காக உணவு உண்ணுவதையும் உணவு உண்ணுமாறு ஒருவரை வற்புறுத்துவதை உரு உபசாரமுறையாகக் கடைப்பிடிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

8. உணவு அருந்துவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக பழங்களை உண்டு அதன்பின்னர் உணவை அருந்துதல் நல்லது. இது உண்ணும் உணவின் அளவைக்குறைத்துக் கொள்ள உதவியாக இருப்பதுடன் போதுமான உணவு உண்ட திருப்தியை ஏற்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

9. உணவிலே அதிகளவு புரதத்தையும், நார்த்தன்மை உள்ள உணவுகளையும் சேர்ப்பதுடன் மாப்பொருள், எண்ணெய் வகைகளைப் பெருமளவு குறைத்துக் கொள்வது நல்லது.

10. சீனி, சக்கரை, பனங்கட்டி, பாவனையை நிறுத்தி தேவை ஏற்படின் இனிப்பூட்டிகளை பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.

11. உணவை ஆறுதலாக உண்ணப்பழக வேண்டும். இது குறைந்தளவு உணவுடன் பசியைப் போக்கவும் போதுமான அளவு உணவு உண்ட திருப்தியை ஏற்படுத்தவும் உதவும்.

12. எண்ணெய், பட்டர், மாஜரீன் பாவனையை தவிர்த்துக் கொள்வது நல்லது. காரணம் இவற்றை சிறிதளவு உட்கொண்டாலும் பெருமளவு நிறை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

13. பொழது போக்கிற்காக எத்தனையோ கலைத்துவமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஈடுபடுவது நல்லது. ஆனால் பொழுது போக்கிற்காக உண்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.

14.தினமும் சயிக்கிள் ஒடுதல், வீட்டுத்தோட்டம் செய்தல்,நடத்தல், எமது அலுவல்களை நாமே செய்து முடித்தல், விளையாடுதல், போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் உடற்பயிற்சிக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உடல் நிறை குறைந்தால் மட்டும் போதாது உடல் வினைத்திறன் உடையதாகவும் ஆரோக்கியம் உடையதாகவும் இருப்பதற்கு போதுமான உடற்பயிற்சி அவசியமாகும்.

15. உடல் நிறை அளக்கும் தராசு ஒன்றை வீட்டிலே வாங்கிவைத்துக் கொள்வது நல்லது. இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது உங்கள் நிறையை சரிபார்த்துக் கொள்வது முக்கியமாகும். உங்கள் உயரத்திற்கு ஏற்ப நீங்கள் இருக்க வேண்டிய நிறையை அறிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் உறவினர் நண்பர்களின் நிறையையும் அளந்து அது அதிகமாக இருந்தால் அவர்களையும் நிறை குறைப்பு செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

16. நீங்கள் பிறரிடம் சுகம் விசாரிக்கும் பொழுது ”நல்லாய் மெலிஞ்சுபோனியள்” என்று கேட்டு சுகம்விசாரிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்வது நல்லது. காரணம் நிறைகுறைந்தவரும் பலரின் ஊக்கத்தை இவ்வாறான “சுகம்” விசாரிப்புகள் கெடுத்துவிடும்.

“விரும்பிய உணவுவகைகளை உண்ணமுடியாத ஒரு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஒரு நல்ல காரியத்திற்கு போனால் கூட அவர்கள் தருவதை உண்ணமுடியாதா? வடை, பற்றீஸ், ஐஸ்கிறீம், பாயாசம், றோல்ஸ் என பல உணவுவகைகளை ஒறுத்து ஒரு சன்னியாசவாழ்க்கை வாழ்ந்துதான் நிறையை கட்டுப்படுத்த வேண்டுமா? இப்படி ஒரு நிறைக்குறைப்பு தேவைதான, என்று எல்லாம் மனம் சலித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட உணவுவகைகளை உண்டும் நாம் அளவான நிறையைப் பேணமுடியும். துறவறம் பூண்டவர்கள் போல் இவை அனைத்தையும் ஒறுத்து வாழ வேண்டிய அவசியமில்லை. இந்த உணவுகளின் சக்த்திப் பெறுமானமும்(கலோரி) உணவிலே அவற்றை எவ்வாறு சமனிலைப்படுத்துவது என்ற அறிவும் இருந்தால் உங்கள் உணவிலே பொரியல், பாயாசம், ஐஸ்கிறீம், பற்றீஸ், வடை லட்டு, ரோல்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இருக்காது, கலியாண வீடுகளுக்குச் செல்லும் பொழுது கூட நாம் வடை பாயாசம் உண்ணமுடியும்.

இந்த உணவுகளை உண்ணும் சந்தர்ப்பத்தில் உணவின் சக்திப்பெறுமானத்தை அல்லது கலோரிப் பெறுமானத்தை எவ்வாறு சமநிலைப் படுத்துவது? இவற்றால் ஏற்படும் நிறை அதிகரிப்பை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் வடை, ரோல்ஸ், ஐஸ்கிறீம் என்பவற்றை மேலதிகமாக உண்ணவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவற்றை மனச்சந்தோஷமாக சுவைத்து உண்டபின் அவரின் அடுத்த பிரதான உணவை பால், பழமாக மாற்றிக்கொண்டால் அது அவரின் சுகாதார நிலையிலோ நிறையிலோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாது. அதற்காக தினந்தோறும் இந்த உணவுவகைகளை உண்பது ஆரோக்கியம் ஆகாது.

“உணவுப்பொருட்களின் சக்தி அல்லது கலோரிப்பெறுமானம் என்றால் என்ன? எமது உடலுக்கு தினம் தோறும் தேவைப்படும் சக்தியின் அளவு என்ன? நாம் செய்யும் ஒவ்வொரு தொழிற்பாட்டிற்கும் எவ்வளவு சக்தி தேவைப்படுகின்றது? போன்ற விடயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

ஒரு உணவை நாம் உண்ணும் பொழுது அது எவ்வளவு சக்தியை எமக்கு வழங்குகின்றதோ அது அந்த உணவின் சக்திப் பெறுமானம் என்று சொல்லப்படும். இது கிலோ கலோரியிலே அளக்கப்படும். நாம் உண்ணும் உணவின் மொத்த சக்திப்பெறுமானம் எமது உடற்தேவைக்கு மேலதிகமாக இருப்பின் அது உடல்நிறையை அதிகரிக்கும். எமது உடலின் அன்றாட தேவைக்கு மேலதிகமாக உண்பதே உடல்நிறை அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு உடலுக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு மாறுபடும். சராசரியாக ஒரு பெண்ணிற்கு தினம்தோறும் தேவைப்படும் சக்தியின் அளவு 1900 கிலோகலோரி ஆகும். ஆதே போல ஒரு சாதாரண நிறை உயரம் உடைய நடுத்தர வயதுடைய ஆணிற்கு தினம் தோறும் தேவைப்படும் சக்தியின் அல்லது கலோரியின் அளவு 2500 கிலோகலோரி ஆகும்.

உடலுக்கு தேவைப்படும் சக்தியின் அளவு அவரின் உயரம், வயது, நிறை, அவரின் தொழிற்பாடு வீதம் போன்றவற்றில் தங்கி இருக்கின்றது.

நிறை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் தனது உடல் பராமரிப்புக்குத் தேவைப்படும் கலோரிப்பெறுமானத்திலும் பார்க்க குறைந்த கலோரிப் பெறுமானமுள்ள உணவை உண்டுவருவார்களாக இருந்தால் அவர்களது நிறை குறைய ஆரம்பிக்கும்.

ஒருவருடைய நிறை படிப்படியாக அதிரித்துவரின் அதனுடைய அர்த்தம் அவர் தினம்தோறும் உட்கொள்ளும் உணவின் மொத்த கலோரிப்பெறுமானமானது அவரின் உடற்பராமரிப்புக்கு தேவைப்படும் மொத்த கலோரிப் பெறுமானத்திலும் பார்க்க அதிகம் என்பதாகும்.

“ஒவ்வொரு உணவினதும் கலோரிப் பெறுமானம் என்ன? நாம் ஒவ்வொரு வேலையையும் மேலதிகமாகச் செய்யும் பொழுது செலவிடப்படும் கலோரி எவ்வளவு? ஒரு கிலோ நிறைக்குறைப்பிற்கு எவ்வளவு கலோரி இழக்கப்பட வேண்டும்?” போன்ற விடயங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாக அமையும்.

மனித உடம்பு ஒரு வினைத்திறன் கூடிய வாகனத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இதனை வடிவமைத்த இறைவன் எவ்வளவு ஒரு அற்புதமான கலைஞன் என்பது புலனாகின்றது. ஒருவர் ஒரு சாதாரண தேநீர் அருந்தினால் அதில் உள்ள சக்தியில் அவரால் 3கிலோமீற்றர் ஒட முடியும். ஒருவர் உடற்பயிற்சிக்காக தினமும் 3Km தூரம் ஒடி விட்டு அந்த களைப்பை போக்குவதற்கு மேலதிகமாக ஒரு தேநீர் அருந்தினால் அவரிலே எந்த வித சக்தி இழப்பும் ஏற்பட மாட்டாது. எனவே இதன் காரணமாக எந்த வித நிறைகுறைவும் ஏற்படமாட்டாது.

ஒரு சாதாரண பெண்ணின் உடம்மை பராமரிப்பதற்கு 1900 கிலோ கலோரி சக்தியும் தேவைப்படும். ஒருவர் தனது நிறையை குறைத்துக்கொள்ள விரும்பினால் அவர் தனக்கு அன்றாடம் தேவைப்படும் சக்தியிலும் பார்க்க குறைந்த குறைந்த சக்திப்பெறுமானம் உள்ள உணவுகளையே உண்ணவேண்டும். ஒவ்வொருவரும் தான் சேமித்துவைத்திருக்கம் சக்தியில் 6500 கிலோகலோரியை இழக்கும் பொழுது அவரின் நிறை 1Kg இனால் குறைடைகின்றது. அதாவது ஒருவர் உடற்பயிற்சி மூலமோ அல்லது உணவுக்கட்டுப்பாட்டு மூலமோ 6500 கிலோகலோரி சக்தியை இழந்தால் அவரின் நிறை 1Kg இனால குறைவடையும்.

ஒருவர் தனது உடற்தேவைக்கு மேலதிகமாக 50 சீனி சேர்க்கப்பட்ட தேநீரை அருந்துபவராக இருந்தால் அவரின் உடல்நிறை 1Kg இனினால் அதிகரிக்கும். அதே போல அவர் 26 ரோல்ஸ்களை மேலதிகமாக உண்ணுவாராக இருந்தால் அவரின் நிறை 1Kg இனால் அதிகரிக்கும். தினம்தோறும் ஒருவர் தனது உடற்தேவைக்கு மேலதிகமாக 1 தேநீரையும், 1ரோல்ஸ் ஐயும் உண்டு வந்தால் 17 நாட்களில் அவரின் நிறை 1Kg இனால் அதிகரிக்கும். அதாவது நாம் இடைநேரங்களில் உண்ணும் உணவுகளும் எமது நிறை அதிகரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.

உடற்பயிற்சியும் உடல் நிறை குறைப்பிலே ஒரு முக்கியமான பங்கு வகிக்றது. அத்துடன் உடற்பயிற்சி உடலின் வினைத்திறனைக் கூட்வதற்கும் பல நோய்களைத் தவிர்ப்பதற்கும் பல நோய்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது. அதாவது உடல் ஆரோக்கியமும் அழகும் பெறுவதற்கு உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் தான் வழமையாக நடக்கும் தூரத்திற்கு மேலதிகமாக 150Km தூரத்தை நடந்தால் அவரின் நிறை 1Kg இனால் குறைவடையும்.

ஒருவர் உணவுக்கட்டுப்பாடு இன்றி உடற்பயிற்சி மட்டும் செய்து நிறையை குறைத்துக்கொள்வது கடினமாகும். எனவே நிறைகுறைப்பு முயற்சிக்கு உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் ஒவ்வொன்றினதும் கலோரிப்பெறுமானம் என்ன என்பதை அறிந்து வைத்திருப்போமாக இருந்தால் எமது உடற்தேவைக்கு வேண்டிய உணவின் அளவை நாமே தீர்மானிக்க முடியும். நாம் உண்ணும் உணவின் அளவை மாற்றி நிறைகுறைப்பையும் செய்துகொள்ள முடியும்.

உடலால் பருத்து அதனால் உண்மையில் பலவீனப்பட்டு பல அன்னிய உணவுகளிற்கெல்லாம் அடிமைப்பட்டு எமது சுதேச ஆரோக்கிய உணவுகளிலிருந்து அன்னியப்பட்டு அடுக்கடுக்காய் பல நோய்களிற்கு ஆட்பட்டு நாம் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?

விளை நிலங்கள் எல்லாம் தரவையாய் கிடக்க எமது உடம்பு மட்டும் விளைந்து போய் வீட்டிலும் தோட்டத்திலும் உளைக்க மறந்து இயந்திரங்களில் ஏறி உழக்குவதற்காய் வாங்கிய உடற்பயிற்சி மிசின்கள் கூட சும்மா கிடக்க சோம்பேறி அடிமைகளாய் நாம் சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கத் துவங்கியதன் காரணம் என்ன?

நல்ல உடற்பயிற்சிகளாக அமையும் நடனம், நாட்டுக்கூத்து, மாவிடிப்பு, அம்மி அரைப்பு, சயிக்கிள் சவாரி, உதைபந்து, கிட்டி, பொடிநடை, காவடி என எமது கலாச்சார மரபுகள் அருகிப்போய் எதற்கெல்லாமோ அடிமையாகிப்போய் எம்மை எதிர்நோக்கி நிற்கும் அபாயங்களை எல்லாம் மறந்து மகிழ்ந்திருக்கும் மனநிலை எப்படி வந்தது?

TV நாடகம் படம் பார்க்க, பேப்பர் படிக்க, வெட்டிப் பேச்சுக்கள் பேச, சும்மா இருக்க, தூங்க, சாப்பிட, கொம்பியுட்டர் பார்க்க, கைத்தெலைபேசி பேச என எல்லாவற்றிற்கும் நேரமிருக்கும் எமக்கு உடற்பயிற்சி செய்யமட்டும் நேரமில்லாமல் போனது ஏன்? கொஞ்சம் சாப்பிட்டாலும் நிறை தானாகக் கூடுகிறது என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு சத்து மா பேணிகளில்தான் சத்து என்று சத்தியமும் செய்துகொண்டு நம் ஊர்க்கோழி முட்டைகளையும், உடன் பாலையும் ஆபத்தான உணவுகள் என அறிவித்துவிட்டு ஊதிப்போன உடம்பை குனிந்து பார்க்கவோ நிறுத்துப் பார்க்கவோ நேரமில்லாமல் அலைந்து திரியும் எம்மை தடுத்தாட்கொள்ளப்போவது யார்?

முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் பெயர்போனவர்கள் தியாகத்திற்கு சிகரம் வைத்தவர்கள் சேமிப்பிற்கும் கொடைக்கும் இலக்கணம் வகுத்தவர்கள், கல்வியில் கரைகண்டவர்கள், நினைத்த இலக்கை அடையும் வரை உழைக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் உடல் பருத்து உயிர்விடுவதா?

நிறையைக் குறைப்போம் என்று உறுதி எடுப்போம். அதற்கான ஆர்வத்தை விதைத்து வளர்ப்போம். உடற்பரிமாணங்களைப் பேணும் கலையை கற்றுத் தெளிவோம். இதை நடைமுறைப்படுத்த திடசங்கற்பம் எடுப்போம். இலகுவான வழிமுறை மூலம் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் இந்த இலக்கை நோக்கி முன்னேறுவோம். மற்றவர்களையும் இந்த வழியில் செல்ல ஊக்குவிப்போம்.உடற்பரிமாணங்களைப் பேணிவருபவர்களை பாராட்டி அவர்களின் வழிமுறைகளை நாமும் கற்றுக்கொள்வோம். வளர்ந்து வரும் சிறார்களின் மனதிலும் உடல்நிறை பராமரிப்பு சம்பந்தமான ஆர்வத்தைப் பதிக்க முயலுவோம். நிறைகூடிய எமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆலோசனை வழங்கி அவர்களையும் ஆரோக்கிய வாழ்விற்கு மீட்டெடுப்போம்.

தற்பொழுது எம்மை ஆட்டிப்படைத்து வரும் தொற்று நோய்களான உயர்குருதி அமுக்கும், நீரிழிவு, கொலஸ்ரோல், புற்றுநோய், மாரடைப்பு, பாரிசவாதம், மூட்டு நோய்கள், போன்றவற்றிற்கெல்லாம் அடிப்படைக்காரணமாக இருக்கும் உடல்நிறை அதிகரிப்பு என்ற மாபெரும் விருட்சத்தின் வேரறுக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை
SHARE