Wednesday, February 20, 2019

யாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்: பாராமுகமான கல்லூரி சமூகம்!

SHARE

யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில் ஆச்சிரம நிலைய வீதி (அண்ணா பாம் அருகில்)டிப்பர் மோதி படுகாயமடைந்த நிலையில் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி மாணவியான செல்வகுமார் டயனிகா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டிப்பர் சாரதியின் கவனயீனமே மேற்படி விபத்துக்கான காரணமெனத் தெரியவருகிறது.

இந்நிலையில் இடுப்புக்கு கீழே அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன்,மாணவியின் முள்ளந்தண்டிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து வருவதாக அறிய முடிகின்றது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கெதிராக மன்றில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமேயே அவர் பிணையில் விடுதலையாக காரணமெனத் தெரியவருகிறது.

கல்லூரி செல்லும் வழியில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதுதொடர்பில் மாணவியின் வகுப்பாசிரியருக்கு தெரியப்படுத்தியும் பாடசாலை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட இதுவரை மாணவியை வைத்தியசாலை சென்று பார்க்கவில்லை எனத் தினக் கூலிகளான பெற்றோர் வேதனையுடன் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் தெற்கு மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த மாணவிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க உரிய தரப்பினர் வழி செய்வார்களா? பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவி நலம் பெற்று வீடு திரும்பிட மனிதாபிமானமுள்ளவர்கள் உதவுவார்களா?

இதேவேளை,பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ விரும்புபவர்கள் 0768630793 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.


SHARE