Friday, March 8, 2019

சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு பலம் சேர்த்த சாதனை இணைப்பாட்டம்!

SHARE

நேற்றைய ஆட்டத்தின் போது, டினோஷனின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி ஆட்டநேர முடிவில் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இவ்வாறான நிலையில், 181 என்ற ஓட்ட எண்ணிக்கையை கடக்கும் நோக்குடன் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் ஆட்டத்தை நகர்த்தியது. முக்கியமாக இன்று களமிறங்கிய இயலரசன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் மிகவும் சிறப்பாக பந்துகளை தடுத்தாடினர். இதில், 54 பந்துகளை எதிர்கொண்டு 21 ஓட்டங்களை பெற்றிருந்த ஜெயதர்சன் LBW முறையில் சரணின் பந்தில் ஆட்டமிழக்க, இன்றைய ஆட்டத்தின் முதல் விக்கெட்டை மத்திய கல்லூரி அணி பறிகொடுத்தது.

விக்கெட் சரிக்கப்பட்ட போதும், தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மத்திய கல்லூரி அணியின் இயலரசன் 181 பந்துகளை எதிர்கொண்டு அரைச்சதம் கடந்தார். மதிய போசன இடைவேளைக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய ராஜ்கிலிண்டன் 40 பந்துகளை எதிர்கொண்டு 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதன் பின்னர் போட்டி மதிய போசன இடைவேளைக்காக நிறுத்தப்பட்ட போது, மத்திய கல்லூரி அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்று பலமான நிலையில் இருந்தனர்.      

மதிய போசன இடைவேளையின் பின்னர் இயலரசனுடன் களமிறங்கிய வியாஸ்காந் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்க, இயலரன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வியாஸ்காந்த 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 41 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, ஹேமதுசனின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

வியாஸ்காந்தின் ஆட்டமிழப்பின் பின்னர் மத்திய கல்லூரி அணியின் தலைவர் மதுசன் உட்பட அடுத்துவந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட்ட போதும், தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராட்டமான துடுப்பாட்டத்தை இயலரசன் வெளிப்படுத்தினார்.  சென் ஜோன்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை கடக்க முக்கிய காரணமாக இருந்த இவர், 77 ஓட்டங்களை பெற்றிருந்த போது டெனுசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டமிழப்புடன் யாழ் மத்தியக் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்குவர, அந்த அணி 14 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் 79 ஓவர்கள் நிறைவில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சென் ஜோன்ஸ் அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, சரண் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, டெனுசன், டினோஷன் மற்றும் ஹேமதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினர்.


யாழ். மத்திய கல்லூரி 14 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சௌமியன் மற்றும் தனுஜன் ஆகியோர் ஆரம்பத்தில் பந்துகளை எதிர்கொள்ள சற்று தடுமாறிய போதும், பின்னர் நேர்த்தியாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய நிலையில், தனுஜன் 101 பந்துகளில் தனது அரைச்சதத்தை கடந்தார். இவரது அரைச்சதத்தின் பின்னரும் ஓட்டங்களை குவித்த சௌமியன் மற்றும் தனுஜன் வடக்கின் பெரும் சமரில் புதிய சாதனை இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். 1990ம் ஆண்டு சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெகந்திரன் மற்றும் சுரேன்குமார் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்த 111 என்ற ஓட்ட இணைப்பாட்டத்தை சௌமியன் மற்றும் தனுஜன் இணைந்து இன்று முறியடித்தனர்.

இந்த சாதனையை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வர, சென் ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட்டிழப்பின்றி 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மத்திய கல்லூரி அணியை விட 107 ஓட்டங்கள் முன்னிலையை பெற்றது.

இன்றைய தின ஆட்டத்தை பொருத்தவரை, சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவதுடன், போட்டியின் முடிவினை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடைபெறவிருக்கிறது.
SHARE