மற்றவர்களை பார்த்து நாம் சிரிக்கும்போது பற்கள் வெண்மையாக இருக்கவேண்டும் என அனைவரும் நினைப்போம்.
நம் பற்களுக்கு வெளியில் தெரியும் பகுதி எனாமல். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது டென்டின்.
ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அதுதான் அவர்களின் பற்களின் நிறம்.
பொதுவாக அனைவருக்கும் பற்கள் வெண்மையாக இருப்பதில்லை, முத்து போன்ற வெண்மை, வெளிர் மஞ்சள், சந்தன நிறம் இப்படி ஒவ்வொருவரின் பற்களின் நிறமும் மாறுபடும்.
பல் முளைக்கும் போது இருக்கும் வெண்மை நிறம் வயது ஆக ஆக பொலிவு குறைந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
பற்களின் வெளிப்பகுதியில் உள்ள எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து உள் பகுதி தெரிவதால்தான் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
இது பொதுவாக முதுமையின் காரணமாக ஏற்படும் நிற மாற்றம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பற்களின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.
இதற்கு காரணம் பற்களை சுத்தமாக பராமரிக்க தவறுவது. பற்களில் உள்ள எனாமலில் பற்காரைகள் நாம் செய்யும் சில செயல்களால் படிகிறது.
வெற்றிலை பாக்கு போடுவது, புகையிலை போடுவது, பான் மசாலா , குட்கா பயன்படுத்துவது, புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் பற்களின் நிறம் மாறுகிறது.
இனிப்பு பண்டங்களை அதிகமாக உண்பது, குளிர் பானங்களை அடிக்கடி குடிப்பது, காபி தேநீர் அதிகமாக குடிப்பது, வொய்ன் , வினிகர் அதிகமாக உபயோகிப்பது இவை அனைத்தும் பற்களின் நிறம் மாறுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் பாலில் ஃப்ளோரைடின் அளவு அதிகமாக இருந்தால் பற்களில் மஞ்சள் கரை படியும். மஞ்சள் கரையை போக்கும் பற்பசை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழத்தோல் – 1
இஞ்சி – ஒரு துண்டு
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
தூள் உப்பு – 1/4 ஸ்பூன்
பற்பசை தயாரிக்கும் முறை
வாழைப்பழத்தோலின் உட்பகுதியில் உள்ள சதை பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்வோம். இது பற்களின் மேற்பகுதியில் உள்ள கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக்க உதவுகிறது.
பின் சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். இஞ்சி பல் வலி மற்றும் கறைகளை அகற்றும்.
வாழைப்பழத்தோலின் உட்பகுதிச்சதை , இஞ்சி , மஞ்சள் , உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதோடு நீங்கள் பல் துலக்க உபயோகிக்கும் பற்பசை சிறிதளவு சேர்த்து கலந்துவிடுங்கள்.
தயார் செய்த பற்பசையை பல்துலக்கி பயன்படுத்தி பற்களில் இரண்டு நிமிடம் பற்களின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் தேய்த்தால் போதும் பற்களில் படித்திருக்கும் பற்காறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
பற்களும் வெண்மையாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் இந்த பற்பசையை தினமும் பயன்படுத்தக்கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
பற்பசையை உபயோகிப்பதோடு புகைப்பழக்கம், குட்கா போன்றவற்றையும் தவிர்த்தால் நல்ல பலனை பெறலாம்.
இனிப்பு பண்டங்களை உண்டவுடன் வாயை நன்றாக கொப்பளிக்கவேண்டும். ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் பல் துலக்கவேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் பல் துலக்கி மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும். பட்டாணி அளவு பற்பசையை மட்டுமே நாள்தோறும் பயன்படுத்தவேண்டும்.
சில பேர் பற்கள் வெண்மையாக வேண்டும் என்பதற்காக அதிக பற்பசையை பயன்படுத்தி பற்களை 5 நிமிடத்திற்கு மேல் பல் துலக்குவார்கள். இதனால் பற்களின் மேற்பகுதியில் உள்ள எனாமல் தேய்ந்துபோகும்.